ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட தலைமறைவு நபர்களை தேடும் என்.ஐ.ஏ.,
சென்னை : பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து, தலா, 5 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட நான்கு பேரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 45. பா.ம.க., பிரமுகரான இவர், திருபுவனம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில், முஸ்லிம் மதத்திற்கு ஹிந்துக்கள் மாற்றப்படுவதை தடுத்து வந்தார். விசாரணை
இதனால், 2019 பிப்., 5ல் மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டார். இது குறித்து, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தொடர் விசாரணையில், தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., எனப்படும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பைச் சேர்ந்தவர்களால் ராமலிங்கம் கொல்லப் பட்டது தெரிய வந்தது. சன்மானம்
கொலையில், அந்த அமைப்பைச் சேர்ந்த 23 பேருக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்து, 19 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கும்பகோணம் அப்துல் மஜீத், 39; பாபநாசம் புர்ஹானுதீன், 31; திருவிடைமருதுார் சாகுல் ஹமீது, 29, நபீல் ஹாசன், 30, ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து உள்ளனர். இவர்கள் குறித்து துப்பு கொடுத்தால், தலா, 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துஉள்ளனர். சமீபத்தில் இவர்களின் கூட்டாளியான திருபுவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, 36, என்பவரை கைது செய்து, ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, தங்கள் கூட்டாளிகள் வெளி நாடுகளுக்கு தப்பிச் செல்லவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். பதுங்கல்
அப்துல் மஜீத், சாகுல் ஹமீது ஆகியோர் ஜவுளி வியாபாரம் செய்கின்றனர். மற்ற இருவர் கறிக்கடையில் வேலை செய்கின்றனர் என்றும் கூறியுள்ளார். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில், அந்த நான்கு பேரும் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பதுங்கி இருப்பது, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தெரிய வந்து உள்ளது. இதனால், அங்கு முகாமிட்டு, நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.