உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குஜராத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லை: உயர்நீதிமன்றத்தில் தகவல்

குஜராத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லை: உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை : 'குஜராத் ஸ்வீட் கடையில் தங்களை யாரும் கொத்தடிமையாக நடத்தவில்லை. மீண்டும் அதே நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்கிறோம்,' என தொழிலாளர்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தனர்.துாத்துக்குடி மாவட்டம் தெற்கு திட்டங்குளம் வசந்தா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு:எனது 2வது மகன் அய்யனார் 27. இவர் 16 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வேலைக்கு செல்வதாகக்கூறிச் சென்றார். பின் தகவல் இல்லை. பல இடங்களில் தேடினோம். அவர் 2023 ல் அலைபேசியில்,'குஜராத்தில் ஒரு ஸ்வீட் கடையில் வேலை செய்கிறேன். கடை உரிமையாளர் தன்னை கொத்தடிமையாக நடத்துகிறார். அடித்து துன்புறுத்துகிறார். கடை உரிமையாளர்கள் உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள்,' என்றார்.மகனை மீட்டு, கொத்தடிமையாக நடத்தும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி துாத்துக்குடி கலெக்டர், எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். மகனை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ஏற்கனவே விசாரணையின்போது அய்யனார் ஆஜர்படுத்தப்பட்டார். அவர்,''குஜராத்தில் தான் வேலை செய்த கடையில் தமிழகம், பிற மாநிலங்களை சேர்ந்த சில தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்,'' என்றார்.நீதிபதிகள்: அத்தொழிலாளர்களை மீட்க துாத்துக்குடி கலெக்டர், எஸ்.பி.,நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வு நேற்று விசாரித்தது.சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் வேலை செய்த 4 தொழிலாளர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள்,'தங்களை யாரும் கொத்தடிமையாக நடத்தவில்லை. சம்பளம் வழங்கப்படுகிறது. அதில் வேறுபாடு உள்ளது. மீண்டும் அதே நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்கிறோம்,' என்றனர். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
செப் 21, 2024 03:59

ஒருவேலயும் இல்லாததுக்கு கொத்தடிமை வேலையே தேவலை போலிருக்கு.


MADHAVAN
செப் 20, 2024 08:27

அன்னபூர்ணா ஹோட்டல் முதலாளியவே மிரட்டி கொத்தடிமை மாதிரி மன்னிப்பு கேக்கவச்சலுங்க நிர்மலாவும் வானதி சீனிவாசனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை