அகழாய்வறிக்கையில் திருத்தம் தேவையில்ல ை
'நான் சமர்ப்பித்த கீழடி அகழாய்வு அறிக்கையில், எந்த மாற்றமும் தேவையில்லை' என, இந்திய தொல்லியல் துறைக்கு, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட, இரண்டு அகழ்வாய்வு பற்றிய, 982 பக்க ஆய்வறிக்கையை, தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன், கடந்த 2023 ஜனவரியில், இந்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்திருந்தார்.அதற்கு, சில நுட்பமான விபரங்களுடன் திருத்தங்களைச் செய்து, மீண்டும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, இந்திய தொல்லியல் துறை நேற்று முன்தினம் கூறியுள்ளது. அதை தி.மு.க., கம்யூனிஸ்ட், வி.சி., உள்ளிட்ட கட்சிகள் கண்டித்துள்ளன. இந்நிலையில், இந்திய தொல்லியல் துறைக்கு, அமர்நாத் ராமகிருஷ்ணன் அனுப்பியுள்ள பதில் கடிதம்:கீழடி அகழ்வாய்வு ஆய்வறிக்கை சரியாகவே உள்ளது. நான் சமர்ப்பித்த, 982 பக்க அறிக்கையில் மாற்றங்கள் எதுவும் தேவையில்லை. அடுக்குகள் வாரியாகவும், கால வரிசைப்படியும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளள. தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு, கி.மு., 800 முதல் கி.மு., 500 என உறுதி செய்யப்பட்ட பின்னரே, அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, திருத்தம் தேவையில்லை.கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு குறித்த வரைபடங்கள், தட்டுகள், படங்கள் உயர் தெளிவு திறனுடன் வழங்கப்பட்டுள்ளன. இறுதி ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, இரண்டரை ஆண்டுகளுக்கு பின், இதுபோன்ற கேள்விகள் எழுப்பப்படுவது முறையல்ல.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.