இரட்டை இலை விவகாரம் அவகாசம் நீட்டிப்பு இல்லை..
சென்னை: நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்க தடை கோரிய விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க, அவகாசம் நீட்டிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'அ.தி.மு.க.,வின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக, பல புகார்களை தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ளேன். 'கட்சி பிரச்னை தொடர்பான சிவில் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கக்கூடாது எனவும் ஆணையத்திடம் கோரி உள்ளேன். மனு மீது விசாரணை நடத்த, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விண்ணப்பம் குறித்து, நான்கு வாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து, நாளை மறுதினம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, பழனிசாமி, பன்னீர்செல்வம், சூரியமூர்த்தி ஆகியோருக்கு, தலைமை தேர்தல் ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பியது.இந்நிலையில், இந்தப் பிரச்னையில், கடந்த மார்ச்சில் பழனிசாமி தாக்கல் செய்திருந்த பதில் மனு, தனக்கு வழங்கப்படாததால் கருத்து தெரிவிக்க முடியவில்லை; எனவே, தன் மனுவின் மீது முடிவெடுக்க, தேர்தல் ஆணையத்துக்கு எட்டு வார அவகாசம் வழங்கும்படி, சூரியமூர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. நான்கு வாரங்களில் மனு மீது முடிவெடுக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்ததால், அவகாசம் நீட்டிப்பு வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.