மக்கள் எவ்வளவு தண்டித்தாலும் தி.மு.க., ஆணவம் குறையவில்லை: தமிழக காங்., தலைவர் காட்டம்
சென்னை: ‘‘தி.மு.க.,வை மக்கள் தோற்கடித்தும், அக்கட்சியின் ஆணவம் குறையவில்லை,’’ என, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: இடைத்தேர்தலில், தி.மு.க.,வை மக்கள் தோற்கடித்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டுகள் குறைவாக வாங்கியும், ‘வெற்றியில் தோல்வி, தோல்வியில் வெற்றி’ என சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். மக்கள், எவ்வளவு தண்டித்தாலும், புரிந்து கொள்ளாமல், ஆணவத்துடன் இருப்பதை பார்த்தால், வருத்தமாக இருக்கிறது. மூன்றாவது இடத்திற்கு வருவோம் என எதிர்பார்த்து, இரண்டாம் இடத்திற்கு வந்ததை, தி.மு.க., கொண்டாடுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் மிகவும் கஷ்டப்பட்டு, இரண்டாம் இடத்தில் இருந்த அ.தி.மு.க.,வை, மூன்றாம் இடத்தில் விட்டு விட்டனர். ராகுலுக்கும் முதல்வர் விஜய்க்கும் இருப்பது சகோதர உறவு. கடந்த முறையே ராகுல் – முதல்வர் விஜய் சந்திப்பு நடந்திருக்க வேண்டும். நேரமின்மை காரணமாக, அது முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.