‘பயிர் சேதம் குறித்த தகவல் இல்லை’
‘‘தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பயிர் சேதம் குறித்த எவ்வித தகவலும் இல்லை,’’ என, வருவாய் நிர்வாக ஆணையர் சந்திரமோகன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறோம். தேவையான இடங்களில், பேரிடர் மீட்பு குழுவினரை பணியமர்த்த, கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதுவரை எந்த இடத்திலும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. டெல்டா மாவட்டங்களில் தற்போது மழை அதிகரித்துள்ளது. ஆனாலும், பயிர் சேதம் குறித்து எந்த தகவலும் தற்போது வரை வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.