உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராகிங் தடுக்க முயற்சி செய்யாத 5 பல்கலைகளுக்கு நோட்டீஸ்

ராகிங் தடுக்க முயற்சி செய்யாத 5 பல்கலைகளுக்கு நோட்டீஸ்

சென்னை:'ராகிங்' தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அறிக்கை அளிக்காத, ஐந்து தமிழக பல்கலைகள் உள்ளிட்ட, 89 பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார்.பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி, ஏற்கனவே, பல்கலைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு, ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார்.

திடீர் ஆய்வுகள்

அதில் கூறப்பட்டிருந்ததாவது: பல்கலைகள், கல்லுாரிகளில், ராகிங்கை தடுப்பதற்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி, சட்ட வழிகாட்டு குழு ஆதரவை பெறுதல், கல்வி நிறுவனங்களின் பொறுப்புணர்வு, திடீர் ஆய்வுகள் குறித்த நெறிமுறைகளை பின்பற்றி, கல்லுாரிகள், விடுதிகளில் ராகிங் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும். இதற்காக நியமிக்கப்பட்ட பேராசிரியர் குழுவினர், கல்லுாரி வளாகங்களில் கண்காணிப்பு பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். அக்குழுவினர், மாணவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, ராகிங் மீதான நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

யு.ஜி.சி., தயார்

ஒரு மாணவர் கூட, 'ராகிங்' வாயிலாக பாதிக்கப்படாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது, ராகிங் குறித்து மாணவர்கள் அளித்த புகார்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, யு.ஜி.சி., இணையளத்தில் பதிவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாத பல்கலைகள் மீது, யு.ஜி.சி., நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை, சென்னை ஜேப்பியார் பல்கலை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, தஞ்சாவூர் ஷண்முகா கலை அறிவியல், தொழில்நுட்பம் ஆராய்ச்சி நிகர்நிலை பல்கலை, திருச்சி ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனம் ஆகிய, ஐந்து தமிழக கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட, நாட்டின் 86 பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., செயலர், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார்.

பரிசீலனை

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு உட்பட்டு, ராகிங்கிற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. அடுத்த 30 நாட்களில், அதை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், யு.ஜி.சி., வழங்கிய ஆராய்ச்சி திட்டங்கள், மானியங்கள், நிதியுதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும். யு.ஜி.சி., விதிகளை பின்பற்றாத பல்கலைகள் பட்டியலில் சேர்க்கப்படும். மேலும் தாமதித்தால், யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மீண்டும் பல்கலை இணைப்பை வழங்க, பல்வேறு மதிப்பாய்வுக்கு பின் பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை