அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு: பைசல் செய்ய தாமதிக்கும் அதிகாரிகள்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மதுரை: 'அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க தாமதிக்கும் அதிகாரிகளை கண்டறிந்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் பணியில் தவறு செய்தால், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர். குறிப்பிட்ட காலத்திற்கு பின் மீண்டும் பணியில் சேர்வதும் உண்டு. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும். அவர்களின் ஓய்வு நாளுக்குள் அதற்கு தீர்வு கண்டால், முறையாக ஓய்வு பெறுவர். இல்லையெனில், பாதி சம்பளத்தை தவிர, வேறு எந்த பணப்பலனையும் பெற இயலாது. பணிக்கால தவறுகள் ஊழியரின் ஓய்வுக்கு பின் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது, 4 ஆண்டுகளுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்காண்டுகளை கடந்து விட்டால், நடவடிக்கைக்கு உள்ளாக மாட்டார்கள். இதுபோன்ற பிரச்னைகள் அடிக்கடி சில துறைகளில் உயரதிகாரிகளுக்கு வருகின்றன. ஓய்வு பெற்ற ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மீது, தொடர்ந்து நான்கு ஆண்டுகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டு, காலக்கெடு முடிந்த பின் குற்றம் சாட்டப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க இயலாது எனக்கூறி, மேலதிகாரிகளின் ஒப்புதலுக்கு கோப்புகள் வருகின்றன. இதுபோன்ற நிலையில், தாமதத்திற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க அரசு முடிவெடுத்துள்ளது. உள்துறை கூடுதல் தலைமை செயலர் தீரஜ்குமார், அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் ஆக., 29ல் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளாமல், தாமதம் செய்து காலக்கெடு முடிந்தபின், அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க இயலாது. குற்றச்சாட்டுகள் மீது மேல்நடவடிக்கையை கைவிடவும் என, தலைமை செயலகத்தின் சில துறைகளில் இருந்து விஜிலன்ஸ் ஆணையத்திற்கு கருத்துருக்கள் அனுப்பப்படுகின்றன. இதை தவிர்க்க, ஓய்வு பெற்ற, குற்றம்சாட்டப்பட்ட ஊழியர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். அவ்வாறு காலக்கெடுவுக்குள் எடுக்காமல், மேல்நடவடிக்கையை கைவிட ஒப்புதலுக்கு வைக்கும் கோப்புகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். காலதாமதம் ஏற்பட அலுவலர்கள் காரணமா என்று கண்டறிய வேண்டும். எங்கு காலதாமதம் ஏற்பட்டது என்பதை கண்டறிந்து, காரணமான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.