ஏழைகளின் ரதம் ரயில்களில் பழைய பெட்டிகள் நீக்கம்
சென்னை:'கரீப் ரத்' எனப்படும், ஏழைகளின் ரதம் ரயில்களில், பழைய பெட்டிகளை நீக்கிவிட்டு, புதிய பெட்டிகள் இணைத்து இயக்கும்படி, அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.சாதாரண மக்களும், 'ஏசி' ரயில்களில் பயணிக்கும் வகையில், 'கரீப் ரத்' என்ற விரைவு ரயில் சேவையை, 2006ம் ஆண்டு ரயில்வே அறிமுகம் செய்தது. 'ஏசி' பெட்டிகள் மட்டுமே உடைய இந்த வகை ரயில்களில், வழக்கமான ரயில்களை விட, 30 சதவீதம் வரை கட்டணம் குறைவு. சென்னை - டில்லி, மும்பை - திருவனந்தபுரம் உட்பட பல்வேறு வழித்தடங்களில், 26 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் பெட்டிகள் பச்சை நிறத்தில் இருக்கும். இவை அனைத்தும் ஐ.சி.எப்., நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பழைய பெட்டிகள். இவற்றை பராமரிப்பதில், நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, இந்த பெட்டிகளை நீக்கி விட்டு, புதிய பெட்டிகளை இணைத்து இயக்கும்படி, அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.