வேட்பாளர் குடியுரிமை சரிபார்ப்பு பழைய செயல்முறை போதுமானது; கொல்கட்டா உயர் நீதிமன்றம் கருத்து
சென்னை : 'தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குடியுரிமையை சரிபார்க்க, தேர்தல் கமிஷன் பின்பற்றும் செயல்முறை போதுமானது' என, கொல்கட்டா உயர்நீதிமன்றம் தெரிவித்துஉள்ளது.நாட்டில் நடக்கும் தேர்தலில், வெளிநாட்டினர் பங்கேற்பு தொடர்பாக, மாணிக் பகிர் என்பவர் கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடர்ந்தார். தன் மனுவில், '2026ல் நடக்க உள்ள மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன், வேட்பாளர்களின் குடியுரிமை சரிபார்ப்பு தொடர்பாக, சரியான முறையை செயல்படுத்த, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். 'வெளிநாட்டினர் சட்ட விரோதமாக, இந்திய குடியுரிமை பெறுவது, ஜனநாயக செயல்முறைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. 'எனவே, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குடியுரிமையை சரிபார்க்க, புதிய ஒழுங்கு முறைகளை ஏற்படுத்த வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.மனுவை தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், நீதிபதி சைதாலி சாட்டர்ஜி ஆகியோர் விசாரித்தனர். தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அனைத்து வேட்பு மனுக்களும், உரிய ஆய்வுக்கு உட்படுத்தப்படும். 'தற்போதைய செயல் முறையே போதுமானது' என எடுத்துரைத்தார். அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். ஒரு வேட்பாளரின் தகுதி அல்லது குடியுரிமைக்கு எதிராக, முறையாக தாக்கல் செய்யப்படும் ஆட்சேபனை அனைத்தும், தேர்தல் கமிஷனால் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், ஒரு வேட்பாளரின் வேட்புமனு குறித்த ஆட்சேபனைகளை, முறையான சட்ட வழிகள் வழியே தெரிவிக்க, குடிமக்களுக்கு முழு உரிமை உண்டு எனக்கூறிய நீதிபதிகள், 'தேர்தல் கமிஷனின் தற்போதைய நடைமுறையே போதுமானது' எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.