கேபிள் ஆப்பரேட்டர்களுடன் அரசு தரப்பில் 12ம் தேதி பேச்சு
சென்னை:கேபிள், 'டிவி' பிரச்னைகள் குறித்து, ஆப்பரேட்டர்களை அழைத்துப் பேச, அரசு கேபிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் வழங்கும், 'செட்டாப் பாக்ஸ்'களை, எச்.டி., தரத்தில் வழங்க வேண்டும் என, ஆப்பரேட்டர்கள் நீண்ட காலமாக வலிறுயுத்தி வருகின்றனர். ஆனால், மாநிலம் முழுதும், ஆயுட்காலம் முடிந்த பழைய செட்டாப் பாக்ஸ்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இதனால், அடிக்கடி தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை உண்டாக்கி வருகிறது. சில ஆப்பரேட்டர்கள், தங்களின் சொந்த செலவில், செட்டாப் பாக்ஸ் பழுதை சரி செய்து வருகின்றனர். அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தில் நிலவும் பிரச்னைகள் தொடர்பாக, அதிகாரிகளை சந்தித்து பேச, ஆப்பரேட்டர்கள் முயற்சித்தனர். அதிகாரிகள் முன்வராததால், பலரும் தனியார் கேபிளுக்கு மாறி வருகின்றனர்.இதுகுறித்து, சமீபத்தில் நமது நாளிதழில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, அரசு கேபிள், 'டிவி' நிறுவன அதிகாரிகள், ஆப்பரேட்டர்களை அழைத்து பேச முடிவு செய்துள்ளனர். மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், வரும் 12ம் தேதி வருமாறு, உயர் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.இதற்கிடையில், அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்திற்கு, புதிய எச்.டி., செட்டாப் பாக்ஸ்களை வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.