ஆகஸ்ட் 21: பிரபல நடிகர் எம்.ஆர்.ராதா மற்றும் இலங்கையைச் சேர்ந்த கீதா தம்பதியின் மகளாக, 1962ல் இதே நாளில் பிறந்தவர் ராதிகா. இவர், இலங்கை, சென்னை, லண்டனில் படித்தார். பாரதிராஜாவின் இயக்கத்தில், 1978ல் வெளியான, கிழக்கே போகும் ரயில் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் தொடர்ந்து, ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், சிவகுமார், பிரபு உள்ளிட்டோருடன் நடித்தார். இவர் நடித்த, நிறம் மாறாத பூக்கள், இன்று போய் நாளை வா, மூன்று முகம், நல்லவனுக்கு நல்லவன், சிப்பிக்குள் முத்து, கிழக்குச் சீமையிலே, சூரியவம்சம், தாய் கிழவி உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. 'ராடன் மீடியா' நிறுவனத்தை துவங்கி, முன்னணி தனியார் தொலைக்காட்சிகளில், 'சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, வாணி ராணி' உள்ளிட்ட பிரபல தொடர்களை தயாரித்து, நடித்தார். தமிழகம், ஆந்திர மாநில அரசு விருதுகளுடன், வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றார். மலையாள நடிகர் பிரதாப் போத்தனை மணந்து விவாகரத்தாகி, நடிகர் சரத்குமாரை மணந்தார். கணவருடன் பா.ஜ.,வில் சேர்ந்து, 2024 லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரது, 64வது பிறந்த தினம் இன்று!