வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தவறான தகவல் தந்தால் ஓராண்டு சிறை
சென்னை:'வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கெடுப்பு படிவத்தில், தவறான தகவல் அளிக்கும் வாக்காளர்களுக்கு, அபராதத்துடன் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்' என இந்திய தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் ஒரு பகுதியாக, ஓட்டுச் சாவடி அலுவலர்கள், தேர்தல் கமிஷன் தயாரித்துள்ள கணக்கெடுப்பு படிவத்தை, வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வினியோகம் செய்யும் பணியை துவக்கினர்.
கியூ.ஆர்., குறியீடு
அந்த படிவத்தில், வாக்காளரின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி, வரிசை எண், ஓட்டுச்சாவடி அமைவிடம், சட்டசபை தொகுதி போன்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளன. இதை, கியூ.ஆர்., குறியீடு வாயிலாக எளிதாக சரிபார்க்கும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. வாக்காளரின் தற்போதைய புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அருகில், புதிய வண்ணப் புகைப்படம் ஒட்ட இடம் விடப்பட்டு உள்ளது. விபரங்கள்
வாக்காளர் பூர்த்தி செய்யும் பகுதியில், பிறந்த தேதி, ஆதார் எண், மொபைல் போன் எண், தந்தை அல்லது பாதுகாவலர் பெயர், அவரது வாக்காளர் அடையாள அட்டை எண், தாயின் பெயர், அவரது வாக்காளர் அடையாள அட்டை எண், துணைவரின் பெயர், அவரது வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. முந்தைய வாக்காளர் பட்டியல், சிறப்பு திருத்தத்தின் போது இடம் பெற்றிருந்த வாக்காளர், உறவினர்களின் விபரங்கள் தனியாக கேட்கப்பட்டு உள்ளன. அதில், வாக்காளரின் பெயர், அடையாளஅட்டை எண், உறவினர் பெயர், உறவு முறை, மாவட்டம், மாநிலம், சட்டசபை தொகுதி பெயர், சட்டசபை தொகுதி எண், ஓட்டுச்சாவடி எண், முகவரி போன்றவை இடம் பெற்றுள்ளன. தவறானது அல்லது உண்மையல்ல என தெரிந்து, அது குறித்த விபரங்களை பதிவு செய்வது, 1950ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி குற்றமாகும்.இதற்காக அதிகபட்சமாக ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கலாம் என உறுதிமொழி அளிக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தும் வகையில், வாக்காளர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் கையெழுத்து அல்லது இடது கை பெருவிரல் ரேகையை அங்கு பதிவு செய்ய வேண்டும்.வாக்காளரின் உறவு முறை குறித்த விபரத்தை படிவத்தில் தெரிவிக்க வேண்டும். வாக்காளர் விபரத்தை, முந்தைய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பட்டியலில் இருந்து சரிபார்த்துள்ளேன் என, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உறுதியளித்து கையொப்பமிட இடம் விடப்பட்டுள்ளது.படையெடுத்த தி.மு.க.,வினர்
அடக்கி வாசித்த அ.தி.மு.க.,வினர்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி திட்டமிட்டபடி நேற்று துவங்கியது. அ.தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டாத நிலையில், தி.மு.க., பூத் ஏஜன்டுகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தமிழகத்தில் 2026 ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, 2004ம் ஆண்டுக்கு பிறகு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை, இந்திய தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் சேர்ப்பது, இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரண்டு இடங்களில் ஓட்டுரிமை வைத்துள்ளவர்கள் போன்றோரை நீக்குவது, இதன் பிரதான நோக்கம்.இதனால், சில அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இப்பணியை ஒத்தி வைக்க வலியுறுத்தி, தி.மு.க., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. எனினும், திட்டமிட்டபடி வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நேற்று துவங்கியது. முதல் கட்டமாக, வாக்காளர் கணக்கெடுப்பு பணியில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டனர். கடந்த 2002 - 2004ம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் வீடுகளுக்கு சென்று, கணக்கெடுப்பு படிவத்தை வினியோகம் செய்தனர். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, அடுத்த முறை வரும்போது உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கூறி சென்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு, தி.மு.க., தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும், அக்கட்சி தலைமை உத்தரவுபடி பூத் ஏஜன்டுகள், தேர்தல் அலுவலர்களுடன் சென்றனர். ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஒரு பூத் ஏஜன்ட், இரண்டு துணை ஏஜன்டுகள், 100 வாக்காளர்களுக்கு ஒரு ஏஜன்ட் என, தேர்தல் பணிக்கு கட்சி தொண்டர்களை தி.மு.க., தலைமை நியமித்துள்ளது. அதன்படி, ஓட்டுச்சாவடி அலுவலருடன், தி.மு.க., தரப்பில் மட்டும் 10க்கும் மேற்பட்டவர்கள் சென்றனர். கூட்டணி கட்சி பூத் ஏஜன்டுகளும் சென்றனர். ஆனால், அ.தி.மு.க., தரப்பில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.12 மாநிலங்களில் வாக்காளர் கணக்கெடுப்பு
7.64 லட்சம் பூத் ஏஜன்டுகள் கண்காணிப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி, தமிழகத்தில் மட்டுமின்றி அந்தமான், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்திய பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் என, 12 மாநிலங்களில் நேற்று துவங்கி உள்ளது. இப்பணியில், 5.33 லட்சம் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.இவர்களின் பணிகளை, 10,448 வாக்காளர் பதிவு அலுவலர்கள் மேற்பார்வையிட உள்ளனர்.அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 1.62 லட்சம் ஓட்டுச்சாவடி அலுவலர்களும், அவர்களுடன் இணைந்து 1.92 லட்சம் பூத் ஏஜன்டுகளும் இப்பணியை கண்காணிக்க உள்ளனர்.தமிழகத்தில் 68,467 ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன், 2.11 லட்சம் பூத் ஏஜன்டுகள் இணைந்து இப்பணிகளை கண்காணிக்க உள்ளனர்.மொத்தமாக 12 மாநிலங்களிலும் சேர்த்து, 7.64 லட்சம் பூத் ஏஜன்டுகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை கண்காணிக்க உள்ளனர்.