உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் சான்றிதழ் முறைகேடு: ஆய்வுக்கு 14 சிறப்பு அலுவலர்கள் நியமனம்

ஆன்லைன் சான்றிதழ் முறைகேடு: ஆய்வுக்கு 14 சிறப்பு அலுவலர்கள் நியமனம்

சென்னை: தமிழக அரசு, 'ஆன்லைன்' வழியே வழங்கும் பட்டா, பட்டா பெயர் மாற்றம் உட்பட, 26 வகையான சான்றிதழ்களை பெறுவதில் சிக்கல்கள் தொடர்வதாக வந்த புகார்களை அடுத்து, சான்றிதழ்கள் முறையாக வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, 14 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

26 வகை சான்று

தமிழக அரசின் வருவாய் துறை சார்பில், ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி, வேளாண் வருமானம், வாரிசு, பட்டா, பட்டா பெயர் மாற்றம் உட்பட, 26 வகையான சான்றிதழ்கள் ஆன்லைன் வழியே வழங்கப்படுகின்றன.பட்டா பெயர் மாற்றம் செய்ய விரும்புவோர், 'இ - சேவை' மையங்கள் வழியாக, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆனால், அலுவலர்கள் அதில் சிறிய தவறுகளை செய்து, விண்ணப்பதாரரை நேரில் வரவழைத்து பணம் பெறும் சம்பவம் அதிகரித்து வருகிறது.குறிப்பாக ஒருவர் நிலம் வாங்கி, பட்டாவுக்கு விண்ணப்பித்தால், அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் பட்டா வழங்கலாம். ஆனால், நிலம் விற்றவர் பெயரையும், பட்டாவில் சேர்த்து வழங்குகின்றனர். ஏன் அவ்வாறு செய்தீர்கள் என, தாலுகா அலுவலகத்தில் கேட்டால், நேரில் வரவழைத்து குறிப்பிட்ட தொகை பெற்றுக் கொண்டு, மறுபடியும் விண்ணப்பியுங்கள் எனக்கூறி, அதன்பின் விண்ணப்பித்தவர் பெயரில் பட்டா வழங்குகின்றனர்.அதேபோல, கூட்டுப்பட்டாவில் ஒன்றிரண்டு பேர் பெயரை விட்டு விட்டு பட்டா வழங்குகின்றனர். இதுகுறித்து விசாரித்தால், நேரில் வருமாறு கூறி, விடுபட்டவர்கள் பெயரை சேர்க்க குறிப்பிட்ட தொகை பெறுகின்றனர். லஞ்சத்தை தடுக்க, அரசு ஆன்லைன் வழி சான்றிதழ் பெற ஏற்பாடு செய்த பின்னும், இதுபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி, பணம் வசூலிப்பது அதிகமாக உள்ளது.

அரசுக்கு அறிக்கை

இதுகுறித்து, அரசுக்கு புகார்கள் சென்ற நிலையில், ஆன்லைன் வாயிலாக சான்றிதழ் வழங்கும் செயல்பாடு குறித்து, கடந்த 22ம் தேதி, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.அதைத் தொடர்ந்து, வருவாய்த் துறை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்களை சிறப்பு அலுவலர்களாக, மாவட்டங்களுக்கு அனுப்பி, ஆன்லைன் சான்றிதழ் செயல்பாடு மற்றும் அதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து, அவர்கள் மாதம்தோறும் அரசுக்கு அறிக்கை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

என்ன நடக்கும்?

சிறப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில், ஒவ்வொரு மாதமும், ஆன்லைன் வழியே எவ்வளவு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன; பட்டா பெயர் மாற்றம் எத்தனை பேருக்கு வழங்கப்படுகிறது என கணக்கிட்டு, அறிக்கை அளிப்பர்.குறிப்பிட்ட சில தாலுகாக்களில் இருந்து, நிலுவையில் உள்ள, ஏற்றுக் கொள்ளப்பட்ட, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் சிலவற்றை தேர்வு செய்து, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஆய்வு செய்ய வேண்டும். விண்ணப்பதாரரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும்.விண்ணப்பம் மீது, வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், தாசில்தார் என்ன முடிவெடுத்து உள்ளனர் என்பதையும் பதிவு செய்ய வேண்டும். தேவையின்றி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருந்தால், அதை மீண்டும் விசாரணைக்கு எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு, புகார் எதுவும் உள்ளதா என்பதையும் கேட்டறிய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Saran balaji
மே 30, 2024 09:04

ஒவ்வொரு நபரிடமும் பேசுவதை ஆடியோ ரெகார்டிங் செய்ய வேண்டும் அப்பொழுது தான் யாரும் தவறு செய்ய முடியாது


R. THIAGARAJAN
மே 29, 2024 14:08

Authentic statutory body from AGS., OFFICE CAN BE AUDITING PERIODICALLY ALL THE SALES REGISTRATION AND ITS PATTA TRANSFERRED MUST BE SCRITANISED AND CONFIRM ITS ACCURACY AND ITS CORRECTNESS. IF AT ALL ANY ILLEGAL TRANSACTIONS IT MUST BE INVESTIGATED THEN AND THERE. THE CORRUPTED OFFICIALS MUST BE PUNISHED ON WARFOOT. ALL SYSTEMS BECOMES MAREIZLISED OTHERWISE PLENTY OF LACUNAS, OFFICIALS ARE USING THEIR AT MOST INTELLIGENCE PENDING X PENDING X PENDING???


N DHANDAPANI
மே 29, 2024 11:34

இந்த ஒரு முன் முயற்சிக்கு தமிழக அரசுக்கு நன்றிகள். ஆனாலும், கடந்த நான்கு வருடங்களாக மூன்று முறை கோவை மாவட்ட ஆட்சியர் விவசாய குறைதீர் கூட்டத்தில் மூலமாக அரசுக்கு ஒரு சிறு வேண்டுகோளை செய்து இருக்கிறோம். ஒவ்வொரு முறையும் பட்டா, சப் டிவிஷன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பொழுது அதற்கான காரணத்தை அன்று வரும் குறுஞ்செய்தியிலேயே அளிக்குமாறு கேட்டு இருக்கிறோம். ஆனால், அது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்த செய்தியில் தெரிவிக்கப்படும் சேவை மையத்தை தொடர்பு கொள்ளவும் என்கின்ற குறிப்பில் எந்த பலனும் இல்லை ஏனென்றால் அங்கு சென்றாலும் "நீங்கள் வட்டாட்சியர் அலுவலகம் செல்லுங்கள்" எனத்தான் கூறப்படுகிறது. எனவே, கணினி மயமாக்கப்பட்ட பிறகும் இந்த இன்னல்கள் தீர்ந்த பாடில்லை.


Davamani Arumuga Gounder
மே 29, 2024 08:21

ஒருவர் நிலம் வாங்கி, பட்டாவுக்கு விண்ணப்பித்தால், அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் பட்டா வழங்கலாம். ஆனால், நிலம் விற்றவர் பெயரையும், பட்டாவில் சேர்த்து வழங்குகின்றனர். ஏன் அவ்வாறு செய்தீர்கள் என, தாலுகா அலுவலகத்தில் கேட்டால், நேரில் வரவழைத்து குறிப்பிட்ட தொகை பெற்றுக் கொண்டு, மறுபடியும் விண்ணப்பியுங்கள் எனக்கூறி, அதன்பின் விண்ணப்பித்தவர் பெயரில் பட்டா வழங்குகின்றனர்.


பட்டாபி
மே 29, 2024 07:15

நல்லது. இந்த 14 பேர்களை கெவனிச்சா போதும். நம்ம பட்டா சேஃப்.


rama adhavan
மே 29, 2024 06:11

எந்த பலனும் இருக்காது. வருவாய் துறை பணிகளை தனியார் வசம், பாஸ்போர்ட் சேவை போல் விட்டு, வலை தள சேவை மட்டுமே செய்ய வேண்டும். போலி மனுக்களுக்கு கடுமையான அபராதம், குற்றவியல் நடவடிக்கை வேண்டும். கடமை தவறும் அலுவலர்களை உடன் பணி டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவர்கள் கோர்ட் போகட்டும். தற்போதைய துறை சார் ஒழுங்கு நடவடிக்கை கால விரயம், கண்துடைப்பு, அரசுக்கு தண்ட செலவு மட்டுமே


மேலும் செய்திகள்









புதிய வீடியோ