நில உபயோக மாற்றத்துக்கு ஆன்லைன் வசதி அறிமுகம்
சென்னை: நில உபயோக மாற்றம், கட்டட பணி நிறைவு சான்று ஆகியவற்றுக்கான பணிகள் முழுமையாக, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அறிவித்துள்ளது. சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், டி.டி.சி.பி., எனும் நகர் ஊரமைப்பு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, கட்டட அனுமதி வழங்கப்படுகின்றன. இதற்கான பணிகள் படிப்படியாக, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்காக இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் அனைத்து துறைகளும் பயன்படுத்தும் வகையில், ஒற்றை சாளர முறைக்கான இணையதளம் செயல்பட்டு வருகிறது. பொது மக்கள், கட்டுமான நிறுவனங்கள், இந்த தளத்தில் விண்ணப்பித்தால் போதும், சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் இதன் வாயிலாகவே பரிசீலனையை முடித்து விடும். இந்த வகையில் தற்போது, நில உபயோக மாற்றம், கட்டட பணி நிறைவு சான்றிதழ் வழங்கும் பணிகளும், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன. ஒற்றை சாளர முறை இணையதளம் வாயி லாக, இதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம். இதனால், 'மேனுவல்' முறையில் அதிக ஆவணங்களை பிரதி எடுத்து கொடுப்பது, அது தொடர்பாக ஒவ்வொரு அதிகாரியையும் நேரில் சந்திப்பது போன்றவை தவிர்க்கப்படும். குறிப்பாக, ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரும்போது, அதன் மீதான பரிசீலனை நேரம் குறையும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக உருவாக்கப்பட்ட, http://onlineppa.tn.gov.in/SWP-web/login என்ற இணையதளம் அதிகாரப்பூர்வமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.