உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையே அ.தி.மு.க.,விடம் பெற வேண்டும்: பா.ஜ., கூட்டத்தில் முடிவு

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையே அ.தி.மு.க.,விடம் பெற வேண்டும்: பா.ஜ., கூட்டத்தில் முடிவு

சென்னை: 'பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டுமே, அ.தி.மு.க.,விடம் கேட்டு பெற வேண்டும்' என, தமிழக பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ., சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 23ல் அவர் தமிழகம் வருகிறார். இந்த சூழலில், தமிழக பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டம், சென்னை கிண்டியில் நேற்று நடந்தது. இதில், தொகுதி பங்கீடு பேச்சு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், 'தி.மு.க.,வை எதிர்கொள்ள பா.ஜ., எவ்வளவு முக்கியம் என்பதை, அ.தி.மு.க., உணர்ந்துள்ளது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விடம், கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகளை பெற வேண்டும். அ.தி.மு.க., தரும் தொகுதிகளை அப்படியே பெறாமல், பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெற வேண்டும்' என, வலியுறுத்திஉள்ளார். கூட்டத்திற்கு பின், நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: என் யாத்திரை, ஜன., 9ம் தேதி நிறைவடைய உள்ளது. அதில் பங்கேற்க, பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளைக்கே தேர்தல் வைத்தாலும் பா.ஜ., தயாராக உள்ளது. தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து இருக்கிறது. தி.மு.க., ஆட்சியில், 7,000க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடக்கிறது. இப்படி இருக்கும்போது, தி.மு.க., ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ