‛ஸ்மார்ட் மீட்டர் வாங்குவதற்கான ஒப்பந்தம் வெளியிட எதிர்ப்பு; 20 ஆயிரம் பணியிடங்கள் காலியாகும் அபாயம்
தேனி; மின்வாரிய நிர்வாகம் 'ஸ்மார்ட் மீட்டர்' வாங்குவதற்கான நிறுவனங்களை தேர்வு செய்ய ஒப்பந்தம் கோர உள்ளது. இதனால் மாநிலத்தில் 20 ஆயிரம் பணியாளர்கள் பாதிக்கப்படுவர். ஒப்பந்தம் கோருவதை நிறுத்தி வைக்குமாறு தமிழ்நாடு மின்வாரிய எம்பாளயர்ஸ் பெடரேஷன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பெடரேஷன் மாநில திட்ட செயலாளர் மூக்கையா கூறியதாவது: மாநிலம் முழுவதும் கணக்கீட்டாளர், கணக்கீட்டு ஆய்வாளர், வருவாய் மேலாளர், மதிப்பீட்டு அலுவலர், முதுநிலை மதிப்பீட்டு அலுவலர் உள்ளிட்ட 5 பணியிடங்களில் மின்வாரியத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். பத்து நாட்களுக்கு முன் மின்வாரியம் ஒரு லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பெற ஒப்பந்தம் கோரியது. அதற்குள்ளாகவே 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் தேவை என நிறுவனங் களுக்கு அழைப்பு விடுத்து ஆக., 31ல் ஆன்லைன் ஒப்பந்தம் நடத்தி நிறுவனங்களை தேர்வு செய்ய உள்ளனர். இதனால் மாநில அளவில் தற்போது பணிபுரியும் 20 ஆயிரம் பணியாளர்கள் பாதிக்கப்படுவதுடன், அவர்கள் சார்ந்த பணிமேற்கொள்ளும் களப்பணியாளர்களான உதவியாளர்கள், போர்மென் பணியிடங்களும் 90 சதவீதம் இல்லாமல் போய்விடும். எனவே மின்வாரியம் ஒப்பந்தம் கோரும் முடிவை கைவிட வலியுறுத்தி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.