வக்கீல்களுக்கு அடிப்படை வசதிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை:புழல் சிறையில் உள்ள விசாரணை கைதிகளை சந்திப்பதற்கு, 'ஆன்லைனில்' பதிவு செய்ய வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு கைதியை மட்டுமே சந்திக்க அனுமதி அளிக்கப்படும். கைதிகளுடன், 'இன்டர்காம்' வழியாக மட்டுமே பேச அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட புதிய நடைமுறைகளை, சிறை நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஆனந்த்குமார் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளாட் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் காசிராஜன் ஆஜராகி, ''வழக்கு தொடர்பாக கைதிகளை சந்திப்பதில், வழக்கறிஞர்களுக்கு சிரமம் உள்ளது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் அளிப்பது இல்லை. கைதிகளும் தங்களுக்கான குறைகளை தெரிவிப்பதிலும் சிரமம் உள்ளது,'' என்றார்.அப்போது நீதிபதிகள், 'இன்டர்காம் வாயிலாக பேசினால், அது பதிவாகும் என்ற பயம், கைதிகளுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், நேரடியாக பேச ஏற்பாடு செய்யலாம். புழல் சிறையில் கைதிகளை சந்திக்க வரும் வழக்கறிஞர்களுக்கு அடிப்படை வசதிகள் அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதா' என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்வதாக, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை, வரும் 1ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.