உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.3,680 சரிவு

ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.3,680 சரிவு

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 3,680 ரூபாய் சரிவடைந்து, 92,320 ரூபாய்க்கு விற்பனையானது. சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம் விலை உச்சத்தை எட்டிஉள்ளது. இந்நிலையில், சில தினங்களாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 12,000 ரூபாய்க்கும், சவரன் 96,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 182 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று காலை, தங்கம் விலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து, 11,700 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 2,400 ரூபாய் சரிவடைந்து, 93,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 180 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மாலை மீண்டும் தங்கம் கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, 11,540 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,280 ரூபாய் சரிவடைந்து, 92,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 175 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு 460 ரூபாய், சவரனுக்கு 3,680 ரூபாய் சரிவடைந்தது. இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: தங்கம் விலை மிகவும் அதிகரித்து உள்ளதால், அதை விற்று லாபம் ஈட்ட, வாங்கப்பட்ட தங்கம் மீண்டும் விற்பனைக்கு வந்து விடுமோ என்று பீதியால், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதை குறைத்துள்ளனர். அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது. ஓரிரு நாட்களுக்கு தங்கம் விலை குறையும். தங்கம் விலை உச்சத்தை எட்டிய நிலையில், ஒரு முறை சரிவை கண்டு, சமநிலைக்கு வந்த பின், மீண்டும் உயரக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை