கண்ணதாசன் தொட்ட உயரத்தை மற்ற கவிஞர்கள் தொடவில்லை
'தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கண்ணதாசன் தொட்ட உயரத்தை, மற்ற கவிஞர்கள் யாரும் தொடவில்லை,'' என்கிறார், இந்த ஆண்டுக்கானகண்ணதாசன் விருது பெற்றுள்ள எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன்.நவீன இலக்கிய தளத்தில், தற்போது எழுதி வரும் இலக்கிய படைப்பாளர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன். நாவல்கள், சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு நுால்கள் என, 27 நுால்களை எழுதி இருக்கிறார்.பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவருக்கு, கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும், கண்ணதாசன் விருது, இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. அவரை சந்தித்து பேசியபோது, தனது படைப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.நான் எழுத துவங்கி, 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இலக்கியத்தை பொறுத்தவரை எனக்கு பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. கலை சார்ந்த ஆத்ம திருப்தி மட்டும் போதும் என, நினைப்பவன். இந்த ஆண்டுக்கான கண்ணதாசன் விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது போன்ற விருதுகள் கிடைக்கும் போதுதான், இந்த சமூகம் கவனிக்கும்படி ஏதோ எழுதி இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றுகிறது.நான் கண்ணதாசனின் பாடல்களை, சிறுவயதில் இருந்து கேட்டு வருகிறேன். தமிழ் திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த பாடலாசிரியர் கண்ணதாசன். திரைப்பாடல்களில் அவர் தொட்ட உயரத்தை, மற்ற கவிஞர்கள் யாரும் தொடவில்லை. கண்ணதாசன் பாடல்களில் மக்களின் மன உணர்வுகள் பிரதிபலிக்கும். காதல், மகிழ்ச்சி, சோகம், தத்துவம், பக்தி இப்படி அனைத்தையும் கண்ணதாசன் பாடல்களை கேட்கும் போது, ரசிகனால் உணரமுடியும். சினிமா பாடல்களில் மட்டுமல்ல, அவரது இலக்கிய படைப்புகளும் தனித்துவமானவை. அவரது கவிதைகள் இன்றைக்கும் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன. மரபு இலக்கியங்களில் இருந்து, நல்ல கருத்துக்களை எடுத்து, சினிமா பாடல்களில் கொடுத்து இருக்கிறார். கண்ணதாசன் ஒரு கவிஞராகவும், பாடலாசிரியராகவும் இரண்டு நிலைகளில் இருந்தும், சிறப்பான பங்களிப்பை செய்து இருக்கிறார்.இவ்வாறு, கோபாலகிருஷ்ணன் கூறினார்.