தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி., கூடாது: உச்ச நீதிமன்றம் தடை
'ஓரணியில் தமிழகம்' என, மொபைல் போன் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க., நடத்தி வருகிறது. ஆதார் எண்ணை பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கை நடத்தினர். செயலியில் வாக்காளர் விபரங்களை உள்ளீடு செய்ததும், சம்பந்தப்பட்டவர் மொபைல் போனுக்கு ஓ.டி.பி., எனும் ஒரு முறை பயன்படுத்தும் கடவு சொல் வரும். அதை உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபடும் தி.மு.க., நபரிடம் கொடுத்ததும், அவர் செயலியில் உள்ளீடு செய்ய, தி.மு.க., உறுப்பினராக சம்பந்தப்பட்ட வாக்காளர் சேர்த்துக் கொள்ளப்படுவார். 'இப்படி ஆதார் எண் வாயிலாக ஓ.டி.பி., பெறுவது, தனிமனித உரிமைக்கு எதிரானது; உடனே அதை தடை செய்ய வேண்டும்' என கேட்டு, திருபுவனத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி ராஜ்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஓ.டி.பி., வாயிலாக தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை நடத்த தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தி.மு.க.,வின் இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, சந்துருகர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தி.மு.க., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், ''இந்த விஷயத்தில் பொதுமக்கள் யாரையும் எந்த தொந்தரவும் செய்யவில்லை. ஓலா, உபெர் போன்ற வாடகை காரில் பயணம் செய்வது துவங்கி, அரசின் திட்டங்களை பெறுவது வரை, அனைத்திலும் ஓ.டி.பி., கேட்டு பெறப்படுகிறது. ''அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்,'' என கேட்டுக் கொண்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் குடிமக்களை பாதுகாப்பதில் நீதிமன்றத்திற்கு கடமை இருக்கிறது. அதில், சமரசம் செய்து கொள்ள முடியாது. எனவே, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவில், நாங்கள் தலையிட விரும்பவில்லை. 'மனுதாரருக்கு மேற்கொண்டு ஏதேனும் கோரிக்கை இருந்தால், உயர் நீதிமன்றத்தையே நாடலாம்' என கூறி, தி.மு.க.,வின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். - டில்லி சிறப்பு நிருபர் -