சென்னை:ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு வசதி ஏற்படுத்த வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நேற்று அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, சென்னை, பல்லவன் சாலையில் செயல்படும், போக்குவரத்துக் கழக ஓய்வூதிய அறக்கட்டளை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதில், அதன் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் வரதராஜன் மற்றும் நிர்வாகிகள் என, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களைப் போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள, தனியார் திருமண மண்டபங்களுக்கு அழைத்து சென்று, மாலையில் விடுவித்தனர்.இது குறித்து, அந்த அமைப்பின் பொதுச்செயலர் கர்சன் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களை சேர்ந்த, 96,000 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அரசு ஊழியர்களும், அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவன ஊழியர்களும், ஓய்வு பெறும் நாளில் பி.எப், விடுப்பு சம்பளம் உள்ளிட்ட பணப்பலன்களை பெற்று செல்கின்றனர். ஆனால், கடந்த 24 மாதங்களாக போக்குவரத்துக் கழகங்களில், ஓய்வு பெறுவோருக்கு பணப்பலன் வழங்காமல், வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்புகின்றனர். சராசரியாக ஒவ்வொரு தொழிலாளிக்கும், 20 லட்சம் ரூபாய் பணப்பலன் நிலுவை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு, அகவிலைப்படி உயர்வு முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில், அகவிலைப்படி உயர்வு வழங்க, நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தும், அரசு அமல்படுத்தவில்லை. ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியம் உயர்த்தப்படுவதில்லை. போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.ஓய்வூதியர்கள் கூறியதாவது:கண்ணதாசன் 60, மதுரை: அரசு பஸ் ஓட்டுனராக பணியாற்றி, கடந்த ஆண்டு ஒய்வு பெற்றேன். இன்னும் ஓய்வு கால பலன் கிடைக்கவில்லை. மகன் திருமணத்துக்கு வாங்கிய கடனுக்கு, வட்டி கட்டி வருகிறேன். குடும்ப செலவுக்கு, போதிய வருமான இல்லாததால், ஓய்வு பெற்ற பிறகும், மருத்துவருக்கு ஓட்டுனராக பணியாற்றுகிறேன்ஜெயராமன் 62, திண்டுக்கல்: ஓட்டுனராக பணியாற்றி 2022 டிசம்பரில் ஓய்வு பெற்றேன். இதுவரை ஓய்வு கால பலன்களை வழங்கவில்லை. பணம் கிடைக்காததால், ஓய்வு பெற்றும் நிம்மதி இல்லாமல் உள்ளேன்.அன்பழகன் 61, கடலுார்: எனது மனைவிக்கு சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்கு, 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளேன். இந்த கடனை செலுத்த முடியாமல், வட்டி கட்டி வருகிறேன். ஓய்வு கால பணம் வழங்காதது, வேதனையாக இருக்கிறது. மாரிமுத்து 61, மதுரை: உடல் நிலை பாதிப்பு காரணமாக, கடந்த ஜனவரியில், விருப்ப ஓய்வு பெற்றேன். எனது ஓய்வு கால பணத்தை நம்பி, என் மகன் வங்கியில், 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, சொந்த வீடு வாங்கி உள்ளார். இதற்கு, மாதந்தோறும் தவணை தொகை செலுத்த முடியவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.