உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திற்கு ரூ.50,000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது: நபார்டு

தமிழகத்திற்கு ரூ.50,000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது: நபார்டு

சென்னை: ''தமிழகத்திற்கு, 2024 - 25ல், 50,000 கோடி ரூபாய்க்கு மேல் நபார்டு வழங்கியது. இது, மற்ற மாநிலங்களுக்கு வழங்கியதை விட அதிகம்,'' என, நபார்டு வங்கியின் தமிழக தலைமைப் பொது மேலாளர் ஆனந்த் தெரிவித்தார். தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டின், தமிழக மண்டல அலுவலகத்தின், 44வது நிறுவன தினம், சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தியாகராஜன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவரும், மத்திய அரசின் காசநோய் ஒழிப்பு திட்ட முதன்மை ஆலோசகருமான சவுமியா சுவாமிநாதன், நபார்டு தலைமை பொது மேலாளர் ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர். அமைச்சர் தியாகராஜன் பேசுகையில்,''கிராமப்புற உள்கட்டமைப்பை உருவாக்க, மாநில அரசுக்கு நபார்டு உதவுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களையும், கணினிமயமாக்க நபார்டு உதவியது. இது, வாடிக்கையாளர்களின் சேவைகளை மேம்படுத்தும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், மண்வள நிர்வாகம், காலநிலை திட்டங்கள் உட்பட பல்வேறு சேவைகளுக்கு நபார்டு சிறந்த முறையில் உதவுகிறது,'' என்றார்.தலைமை பொது மேலாளர் ஆனந்த் பேசும்போது, ''உள்கட்டமைப்பு உருவாக்கம், விவசாயத்துக்கு மறு நிதியுதவி செய்தல் ஆகியவற்றுக்காக, தமிழகத்திற்கு, 2024 - 25ல், 50,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டது. இது, மற்ற மாநிலங்களுக்கு வழங்கியதை விட அதிகம். கிராம உள்கட்டமைப்பை உருவாக்க, 38,700 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ