வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எங்கே போனார் ஷாநவாஸ்..
நாகப்பட்டினம்: டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை விறு, விறுப்பாக நடைபெறும் நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் மலைபோல் தேங்கி கிடக்கின்றன.டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடந்துள்ளது. பருவம் தவறிய மழையால், நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு பெரும் இன்னலுக்கு உள்ளான விவசாயிகள், பெரும் சிரமத்துக்கு இடையில் சம்பா அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர். விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மூலமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. நாகை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 500 ஏக்கரில் சம்பா, 3500 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. நாகையில் மட்டும் 175 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், சேதமடைவதை தடுக்க கோவில்பத்தில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கும், அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு ரயில்கள் மூலம் உடனுக்குடன் கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.இருப்பினும் பரவலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் நெல் மூட்டைகள் மலை போல் தேங்கி கிடக்கிறது. சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலும் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் கூறுகையில், ''நாள்தோறும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. மூட்டைகளை ஏற்றிச் செல்ல ஒரு நாள் விட்டு ஒரு நாள் லாரி வருகிறது. 500 மூட்டைகள் மட்டுமே லாரியில் ஏற்ற முடியும். வெயில் அதிகமாக உள்ளதால் நெல் மூட்டைகள் நாட்கணக்கில் திறந்த வெளியில் கிடக்கும் போது, எடை குறைந்தால் ஊழியர்கள் தான் தண்டம் கட்ட வேண்டியுள்ளது. மூட்டைகளை அடுக்கி வைக்க, பட்டி அமைக்க சவுக்கு மரங்களும் பற்றாக்குறை என்பதால் கொள்முதல் செய்ய ஊழியர்கள் தயக்கம் காட்டுவதோடு, விவசாயிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்'' என்றனர்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நாகை மண்டல துணை மேலாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''175 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நேற்று வரை 61 ஆயிரத்து 585 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 38648 டன் லாரிகளில் ஏற்றி, கோவில்பத்து சேமிப்பு கிடங்கு மற்றும் வெளி மாவட்ட அரவை ஆலைகளுக்கு ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22937 டன் இருப்பு உள்ளது. நாள்தோறும் 100 லாரிகள் இயக்கப்படுகிறது. நடைமுறை சிக்கல்களால் நடப்பாண்டு திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் திறக்கவில்லை. நேரடியாக அரவைக்காக ரயில்கள் மூலம் அனுப்பப்படுவதால் சில தாமதம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதில் அலட்சியம் காட்டும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
எங்கே போனார் ஷாநவாஸ்..