உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்முறையாக நெல் கொள்முதல் 45 லட்சம் டன்னை தாண்டியது

முதல்முறையாக நெல் கொள்முதல் 45 லட்சம் டன்னை தாண்டியது

சென்னை:தமிழக விவசாயிகளிடம் இருந்து முதல் முறையாக, 45 லட்சம் டன்னுக்கு அதிகமான நெல், நுகர்பொருள் வாணிப கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்காக, மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக விவசாயிகளுக்கு, 100 கிலோ எடை உடைய குவின்டால் நெல்லுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து இதுவரை அதிக அளவாக, 2020 - 21 சீசனில், 44.90 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. நடப்பு சீசன், 2024 செப்டம்பர், 1ல் துவங்கிய நிலையில், இம்மாதத்துடன் முடிவடைகிறது. இதற்காக, 3,758 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. நேற்று முன்தினம் நிலவரப்படி, எப்போதும் இல்லாத அளவாக, 45.11 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவே, முந்தைய சீசனின் இதே காலகட்டத்தில், 33.24 லட்சம் டன்னாக குறைந்திருந்தது. கடந்த சீசனை விட இந்த சீசனில், 11.87 லட்சம் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 5 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில், 10,600 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலுார், பெரம்பலுார், அரியலுார் ஆகிய டெல்டா மாவட்டங்களில் மட்டும், 29.60 லட்சம் டன் நெல் கிடைத்துள்ளது. தற்போது, நெல் வரத்து குறைந்துள்ளதால், 611 நேரடி நிலையங்கள் செயல்படுகின்றன. நடப்பு சீசன் முடிவடைய, 29 நாட்கள் உள்ளன. தினமும் சராசரியாக, 15,000 டன் நெல் கொள்முதல் செய்யப்படுவதால் இன்னும், 2 லட்சம் டன்னுக்கு மேல் நெல் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை