உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாவட்ட செயலர்களுடன் பழனிசாமி ஆலோசனை; பூத் கமிட்டி பணிகளை ஜூலை 10க்குள் முடிக்க உத்தரவு

மாவட்ட செயலர்களுடன் பழனிசாமி ஆலோசனை; பூத் கமிட்டி பணிகளை ஜூலை 10க்குள் முடிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை,: அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று ஆலோசனை நடத்தினார்.சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு, இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில், ஓட்டுச்சாவடி அளவில், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில், அ.தி.மு.க., கவனம் செலுத்தி வருகிறது. கடந்த மே 29, 30 தேதிகளில், அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள், மாவட்ட பொறுப்பாளர்களுடன், பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது 'பூத்' கமிட்டி அமைக்கும் பணிகளை, 100 சதவீதம் முடித்து, அதன் விபரங்களை தலைமைக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஒன்பது பேர் அடங்கிய பூத் கமிட்டியில், மூன்று பெண்கள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும். சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்கும் இடம் அளிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூத் கமிட்டி அமைப்பதில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.எனவே, மீண்டும் மாவட்ட செயலர்கள், பொறுப்பாளர்களுடன் பழனிசாமி, நேற்று ஆலோசனை நடத்தினார். சிவகங்கை, திண்டுக்கல், பெரம்பலுார், அரியலுார், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, தென்காசி, நெல்லை, விருதுநகர், தேனி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, ஈரோடு வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட, 42 மாவட்ட செயலர்கள், 42 பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.மாவட்ட வாரியாக செயலர், பொறுப்பாளர்கள் இருவரையும், தனியாக அழைத்துப் பேசிய பழனிசாமி, 'வரும் ஜூலை 10ம் தேதிக்குள், பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை, 100 சதவீதம் முடிக்க வேண்டும். அதன்பிறகுதான், எனது சுற்றுப்பயணத்தை துவக்க முடியும். கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டும். அ.தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. அதில் மேலும் பல கட்சிகள் இணையும். அதை தலைமை முடிவு செய்யும். சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது ஒன்றே, நம் இலக்காக இருக்க வேண்டும்' எனக் கூறியதாக, கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலர்கள் தெரிவித்தனர்.இன்று, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், திருப்பத்துார், வேலுார், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களுக்கு உட்பட்ட 40 மாவட்ட செயலர்கள், 40 மாவட்ட பொறுப்பாளர்களுடன், பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை