சென்னை : ஆசிய இளையோர் கபடி போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற, தமிழகத்தை சேர்ந்த கபடி வீரர் அபினேஷுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஒரு லட்சம் ரூபாய் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பஹ்ரைன் நாட்டில் நடந்த, ஆசிய இளையோர் கபடி போட்டியில், இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது. இந்த அணியில், திருவாரூர் மாவட்டம், வடுவூரை சேர்ந்த மோகன்தாஸ் -- தனலட்சுமியின் மகன் அபினேஷ் இடம் பெற்றார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அவரது இல்லத்தில் அபினேஷ், தனது குடும்பத்தினருடன் சந்தித்தார். அப்போது அவருக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பூங்கொத்தும் அளித்து பாராட்டினார். கபடி போட்டியில், மேலும் சாதனைகள் படைத்து, நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்து தெரிவித்தார். *** பட விளக்கம் ஆசிய இளையோர் கபடி போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற, தமிழக வீரர் அபினேஷுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஒரு லட்சம் ரூபாய் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அருகில் அபினேஷின் தாய் தனலட்சுமி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் காமராஜ். இடம்: முகாம் அலுவலகம், பசுமை வழி சாலை, சென்னை