உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 75 புதுமுகங்களை வேட்பாளராக களமிறக்க பழனிசாமி திட்டம்

75 புதுமுகங்களை வேட்பாளராக களமிறக்க பழனிசாமி திட்டம்

சென்னை: சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் 75 புதுமுகங்களை வேட்பாளர்களாக களமிறக்க, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பேசுகையில், 'இன்றைக்கு பொதுக்குழு உறுப்பினர்களாக இருக்கிறவர்கள் தான், நாளைய எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள்' என்றார். அவரது பேச்சுக்கு, பொதுக்குழுவில் பலத்த கரகோஷம் காணப்பட்டது. வரும் சட்டசபை தேர்தலில், 210 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன், தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இது குறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: 2021 சட்டசபை தேர்தலில், புதுமுகங்கள் 50 பேருக்கு 'சீட்' வழங்கப்பட்டது. அதில், பழனிசாமியின் தீவிர விசுவாசிகள் 15 பேர் வெற்றி பெற்றனர். வரும் சட்டசபை தேர்தலில், 75 புதுமுக வேட்பாளர்களை களமிறக்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார். தேர்தல் முடிவுக்கு பின், தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டால், எம்.எல்.ஏ.,க்கள் விலை போய் விடக்கூடாது என்பதற்காக, தன் விசுவாசிகளுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கவும் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில், பணம் படைத்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.,க்கள் சிலரை தேர்வு செய்து போட்டியிடும்படி பழனிசாமி வலியுறுத்தினார். ஆனால், தேர்தல் தோல்விக்கு பயந்து, அவர்கள் தயங்கினர். இதனால், தகுதியான வேட்பாளர்கள் இல்லாத காரணத்தால், சில தொகுதிகளில் அ.தி.மு.க., மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட தயங்கியவர்களுக்கு, சட்டசபை தேர்தலில் வாய்ப்பு தரக்கூடாது என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார். அதே சமயம், லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்களில் 15 பேர் வரை, சட்டசபை தேர்தலில் களமிறக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்களில் ஒரு சிலரை தவிர, மற்ற அனைவருக்கும் 'சீட்' உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 46 தனி தொகுதிகளில், கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு அதிகமாக ஒதுக்கி கொடுத்தும், அக்கட்சிகள் தோல்வி அடைந்தன. எனவே, இந்த தேர்தலில், 35 தனி தொகுதிகளில் அ.தி.மு.க.,வே போட்டியிட திட்டமிட்டுள்ளது. 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், பகுதி, நகர, ஒன்றிய செயலர்களை வேட்பாளர்களாக ஜெயலலிதா அறிவித்தார்; அவர்கள் வெற்றி பெற்றனர். அதனால், ஜெயலலிதா பாணியில் வேட்பாளர்களை தேர்வு செய்யவும் பழனிசாமி ஆலோசித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V RAMASWAMY
டிச 13, 2025 12:00

புது முகங்கள் அதிகம் வேண்டாம், புதுமுகமோ பழைய முகமோ குற்றப்பின்னணி இல்லாமல் மக்கள் நம்பும் நல்லவர்களை களமிறக்குங்கள், வெற்றி உறுதி


Natchimuthu Chithiraisamy
டிச 13, 2025 11:44

காங்கயம் கதை போல் ஆகிவிடும்


Kovandakurichy Govindaraj
டிச 13, 2025 10:06

கட்சி சீனியர்களுக்கு சீட் கொடுத்தால் தன்னை மதிக்க மாட்டார்கள் என்று புதுமுகங்களை களத்தில் இறங்குகிறார் பழனிசாமி . ஆனால் வெற்றி பெறுவது கடினம்


மோகனசுந்தரம்
டிச 13, 2025 06:33

எப்படித்தான் புதுமுகங்களையோ பழைய முகங்களையும் அறிமுகப்படுத்தினாலும் ஆணவம் அகம்பாவம் அகலாதவரை நீங்க வெற்றி பெறுவது மிக மிக கடினம்.


vaiko
டிச 13, 2025 04:13

புரியவில்லை. அதிமுக 210 இடங்களில் வென்றால் எப்பூடி தொங்கு சட்டசபை அமையும் ?


Haja Kuthubdeen
டிச 13, 2025 09:28

அஇஅதிமுக மட்டுமே 210தொகுதிகளில் போட்டியிடவில்லை...கூட்டணி வேட்பாளர்களும் சேர்ந்துதான்..ஒவ்வொரு தொகுதியிலும் சிறந்தவர்களையே நிறுத்தனும்.அதான் எடப்பாடியாரின் எண்ணம்.


புதிய வீடியோ