உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டவர்களை சேர்ப்பது பற்றி பழனிசாமி முடிவு செய்வார்

 அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டவர்களை சேர்ப்பது பற்றி பழனிசாமி முடிவு செய்வார்

சென்னை: ''அ.தி.மு.க.,வில் அல்லது கூட்டணியில் யாரை சேர்ப்பது, நீக்குவது என்பதை பொதுச்செயலர் முடிவு செய்வார்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். கட்சி அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., அலுவலகத்தில் கட்சியினர் நீண்ட வரிசையில் நின்று விருப்ப மனு வாங்கி வருகின்றனர். பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., ஆட்சி அமையும் என்பதற்கான அறிகுறியாக இதை பார்க்கிறோம். தேர்தலுக்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில், ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும். முதல்வர் ஸ்டாலினே வெளியேறு என்ற மக்களின் குரல், தமிழகம் முழுதும் எதிரொலிக்கிறது. கூட்டணியில், பா.ஜ., 65 தொகுதிகள் கேட்பதாக கூறப்படுவதற்கு, நான் பதில் சொல்ல முடியாது. கூட்டணி கட்சிகளின் பலத்திற்கேற்ப, அவர்களுக்கான தொகுதிகளை சரியான நேரத்தில் அ.தி.மு.க., தலைமை ஒதுக்கும். நான் மீண்டும் ராயபுரத்தில் போட்டியிடுவேன். கடந்த 1991ல் ராயபுரத்தில் ஜெயலலிதா நிறுத்தினார். 25 ஆண்டுகள் வெற்றியை கொடுத்த ராயபுரத்தை விட்டு செல்ல மாட்டேன். வாழ்நாள் முழுதும் ராயபுரத்தில் தான் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார். அ.தி.மு.க.,வில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் சேர்க்கப்படுவரா என்ற கேள்விக்கு, ''அ.தி.மு.க., வில் அல்லது கூட்டணியில் யாரை சேர்ப்பது, நீக்குவது என்பது கட்சியும், பொதுச்செயலரும் முடிவு செய்ய வேண்டிய விஷயம். நான் முடிவு செய்ய முடியாத விஷயம்,'' என்றார். பன்னீர்செல்வம், தினகரன் பெயரை எடுத்தாலே, கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் என இதுவரை கூறி வந்த ஜெயகுமார், 'அவர்களை சேர்ப்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்' என கூறியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ