உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தளவாய்சுந்தரம் கதிதான் ஏற்படும் 6 மாஜிக்களுக்கு பழனிசாமி எச்சரிக்கை

தளவாய்சுந்தரம் கதிதான் ஏற்படும் 6 மாஜிக்களுக்கு பழனிசாமி எச்சரிக்கை

தளவாய் சுந்தரத்துடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும், பிரிந்தவர்களை இணைக்கும் முயற்சியை முன்னெடுக்கும் ஆறு முன்னாள் அமைச்சர்களுக்கும், திருக்குறள் வாயிலாக பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது, சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் ஆகிய மூவரையும் எக்காரணத்தைக் கொண்டும், அ.தி.மு.க.,வில் சேர்க்க மாட்டேன் என்ற முடிவில், பழனிசாமி உறுதியாக இருக்கிறார். ஆனால், டிசம்பர் மாதத்திற்குள் இணைப்பு குறித்து, நல்ல முடிவு வரும் என்றும், அதுவரை பொறுமையாக இருக்குமாறும், தன் ஆதரவாளர்களிடம் சசிகலா தெரிவித்து உள்ளார்.'அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கும் முயற்சியில், முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் இறங்கியுள்ளனர். அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். அதனால், தொலைக்காட்சி விவாதங்களில் பழனிசாமியை விமர்சித்துப் பேச வேண்டாம்' என, பன்னீர்செல்வமும் தன் ஆதரவாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.இந்நிலையில், பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை, அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, இணைப்பு முயற்சி மேற்கொள்ளும் முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேருக்கும், தளவாய் சுந்தரத்திற்கு நேர்ந்த கதிதான் ஏற்படும் என்பதை, மறைமுகமாக குறிப்பிடும் வகையில், அந்த அறிக்கையில் அவர் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார்.அவரது அறிக்கை:'வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு' என்ற வள்ளுவர் அறிவுரையை மறக்கலாமா? வெளிப்படையான பகைவருக்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், நண்பர்கள் போல இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என, எத்தனை ஆழமான அறிவுரையை வள்ளுவப் பேராசான் நமக்கு தந்திருக்கிறார். உட்பகை கொண்டவர்கள் இனி நம் கட்சிக்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம். அ.தி.மு.க., ஆட்சி அமைய எந்த தியாகத்தையும் செய்ய தயார்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:பா.ஜ.,வுடன் தளவாய் சுந்தரம் தொடர்பு வைத்துள்ளார். இனி, அவரை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்பதில், பழனிசாமி உறுதியாக உள்ளார். அதனால்தான் உட்பகை என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளார்.மேலும், இணைப்பு முயற்சியை முன்னெடுக்கும், ஆறு முன்னாள் அமைச்சர்களுக்கும் தளவாய் சுந்தரத்திற்கு நேர்ந்த கதிதான் என்பதையும், திருக்குறள் வழியாக, அவர் மறைமுகமாக சொல்லி விட்டார்.இவ்வாறு கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
அக் 16, 2024 10:16

பழனிசாமி: "அதிமுக வை அழித்தொழிக்கும் பெருமை என்னை மட்டுமே சேரும். அதில் சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டேன். ஜெய் அன்னபூரணி அரசு ஆத்தா"


முக்கிய வீடியோ