சென்னை : 'அ.தி.மு.க., கூட்டணி குழப்பங்கள் தேர்தல் வரை தொடர்ந்தால், அடுத்த மே தினத்தில் பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்ல, கட்சியின் பொதுச்செயலர் பதவியையும் இழந்து நிற்பார்' என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச மொபைல் போன் விலையின்றி வழங்கப்படும்' என, அறிவித்திருந்தனர். ஆனால், சொன்னதை போல கொடுக்கவில்லை.பெரிய பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், இலவச 'வை-பை' இணையதள வசதி வழங்கப்படும் என, வாக்குறுதி கொடுத்திருந்தனர் அதையும் நிறைவேற்றவில்லை.கடந்த 2011 சட்டசபை தேர்தல் அறிக்கையில், 'ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாளொன்றுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீர் வழங்கப்படும்' என, சொன்னதை நிறவேற்றவில்லை. அம்மா பேங்கிங் கார்டு, தமிழன்னை சிலை, குறைந்த கட்டணத்தில் அம்மா தியேட்டர் என, கலர் கலராக எத்தனையோ மத்தாப்புகளை கொளுத்திப் போட்டது அ.தி.மு.க., ஆனால், எல்லாமே புஸ்ஸ்ஸ்.இதையெல்லாம் நிறைவேற்றாத பழனிசாமி, தி.மு.க., வாக்குறுதியை பற்றி வக்கணையாக பேசுவது வெட்கக்கேடு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.