பழனிசாமி பிரசாரத்துக்கு அனுமதி அ.தி.மு.க., வழக்கில் உத்தரவு
கரூர் : கரூரில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பதால், உய ர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இது குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கரூரில், நேற்று அளித்த பேட்டி: கரூர் மாவட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வரும், 25, 26 தேதிகளில் பிரசாரம் செய்கிறார். இதற்காக, சுவர் விளம்பரம் செய்யவும் , பிளக்ஸ் பேனர்கள் வைக்கவும் போலீசார் தடை விதிக்கின்றனர். பாலங்களில், தி.மு.க.,வினர், அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்த நிலையில், அ.தி.மு.க.,வினரை மட்டும் நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி வாங்குமாறு போலீசார் தடுக்கின்றனர். பழனிசாமி பிரசாரத்துக்காக, கரூர் பஸ் ஸ்டாண்ட், ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டு போலீசில் கடிதம் அளித்தோம். அது தடை செய்யப்பட்ட இடம் என, போலீசார் கூறுகின்றனர். ஆனால், அதே இடத்தில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எம்.பி., கனிமொழி ஆகியோர், இதற்கு முன் பிரசாரம் செய்துள்ளனர். கரூரில், பழனிசாமி பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பதால், அனுமதி கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். தி.மு.க.,வினர், தோல்வி பயத்தில் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, அ.தி.மு.க., சார்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த , உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுந்தர் மோகன், 'பழனிசாமி பிரசாரத்துக்கு, அனுமதி கோரி எஸ்.பி., யிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். மனுவை, செப்.22 க்குள் பரிசீலித்து, எஸ்.பி., உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என தீர்ப்பளித்தார்.