உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி அலுவலர்களுக்கு அனுமதி

விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி அலுவலர்களுக்கு அனுமதி

சென்னை:ஊராட்சி பகுதிகளில் விதிமீறல் கட்டடங்களை கண்டுபிடித்து, 'நோட்டீஸ்' அளிக்கவும், 'சீல்' வைக்கவும் நிர்வாக அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கலாம் என, ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், நகர்ப்புற பகுதிகளில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக மட்டுமே, சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமீறல் கட்டடங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இந்த விஷயத்தில், தலைமை செயலர் தலைமையிலான உயர் நிலை குழுவின் வழிகாட்டுதல் அடிப்படையில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், ஊரக வளர்ச்சி துறை நடவடிக்கைகளை துவக்கி உள்ளது. இது தொடர்பாக, ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பா.பொன்னையா, சென்னை தவிர்த்து மற்ற மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்: ஊரக பகுதிகளில், 10,000 சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டடங்கள் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. இத்துடன், 2,500 சதுர அடி மனையில், 3,500 சதுர அடி பரப்பளவுக்கு சுயசான்று முறையில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. இதில், 10,000 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு, நகர் மற்றும் ஊரமைப்பு துறை தொழில்நுட்ப அனுமதி வழங்குகிறது. இதன் அடிப்படையில், கட்டட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த கட்டடங்களில் விதிமீறல்கள் எதுவும் இருக்கிறதா என்பதை, அந்தந்த பகுதி ஊராட்சி நிர்வாக அலுவலர்கள் சரி பார்க்க வேண்டும். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்போது, முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதற்கான சான்றுகளை சரிபார்க்க வேண்டும். அந்த வரைபடத்தின் அடிப்படையில், கட்டடம் முறையாக கட்டப்படுகிறதா அல்லது விதிமீறல் உள்ளதா என்பதை, ஊராட்சி நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். கட்டுமான பணிகள் முடிந்த நிலையிலும், அதற்கு முறையான அனுமதி உள்ளதா, விதிமீறல் உள்ளதா என்பதை, நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த விபரங்களை, நிர்வாக அலுவலர் தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட வேண்டும். அனுமதி இன்றி கட்டடம் கட்டப்பட்டு கொண்டிருந்தால், அதற்கு, ஊராட்சியின் நிர்வாக அலுவலர்கள், 'சீல்' வைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி