பாரம்பரிய வாகனங்களின் அணிவகுப்பு
புதுச்சேரி: சுற்றுலாத் துறை, இந்திய வரலாற்று கார்கள் சங்கம் சார்பில்,புதுச்சேரி கடற்கரை சாலையில் பாரம்பரிய வாகனங்களின் அணிவகுப்பு கண்காட்சி நடந்தது.புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் 2008ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் பாரம்பரிய வாகனங்களின் அணிவகுப்பு கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது இந்தாண்டு சுற்றுலாத்துறை, இந்திய வரலாற்று கார்கள் சங்கத்துடன் இணைந்து பாரம்பரிய வாகனங்களின் அணிவகுப்பு கண்காட்சி, கடற்கரை சாலை, அம்பேத்கர் மணிமண்டபம் அருகே நேற்று மாலை நடந்தது.கண்காட்சியை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், திருமுருகன், அரசு செயலர் ஜெயந்த குமார் ரே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பயன்படுத்திய காரில் கவர்னர் மற்றும் முதல்வர் அமர்ந்து மகிழ்ந்தனர்.பாரம்பரிய வாகனங்களின் அணிவகுப்பு கண்காட்சியில், 50க்கும் மேற்பட்ட தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களைச் சார்ந்த பழமையான வாகனங்கள் இடம் பெற்றன. இதை, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு, செல்பி எடுத்துக் கொண்டனர்.