| ADDED : நவ 09, 2024 02:47 AM
சென்னை:சென்னையில் இருந்து டில்லிக்கு, நேற்று காலை 10:00 மணிக்கு, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் புறப்பட தயாராக இருந்தது. இதில், 170 பேர் பயணம் செய்ய இருந்தனர். விமானம் ரன்வேயில் ஓடத் துவங்கியபோது, 'காக்பிட்' எனும் கட்டளை மையத்தில் கோளாறு ஏற்பட்டதற்கான அலாரம் அடித்துள்ளது.உடனே விமானி, விமானத்தை ரன்வேயில் அவசரமாக நிறுத்தினார். பின், விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த விமான பொறியாளர்கள் குழு, இழுவை வண்டி வாயிலாக விமானத்தை இழுத்துச்சென்று, சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் கடந்தும், கோளாறு சரி செய்யப்படவில்லை.இதையடுத்து பயணியர் கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த இரண்டு தினங்களாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் தொடர்ந்து இயந்திர கோளாறு ஏற்படுவதும், ரத்து செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.