உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அபராத வட்டி தள்ளுபடி திட்டம்; வீட்டுவசதி சங்கங்கள் காத்திருப்பு

அபராத வட்டி தள்ளுபடி திட்டம்; வீட்டுவசதி சங்கங்கள் காத்திருப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள, 1,200 கோடி ரூபாய் கடன்களை வசூலிக்க, அபராத வட்டி தள்ளுபடி திட்டத்தை, மீண்டும் அறிவிப்பதற்கான கோப்பு, நிதித்துறை ஒப்புதலுக்காக மூன்று மாதங்களுக்கு மேலாக காத்திருக்கிறது. தமிழகத்தில், 670 கூட்டு றவு வீட்டுவசதி சங்கங்கள் உள்ளன. இவற்றில், நிர்வாக குளறுபடி காரணமாக, பெரும்பாலான சங்கங்களின் நிதி நிலைமை மோசமானது. இதனால், வீட்டுவசதி சங்கங்கள் செயல்பட முடியாத அளவுக்கு முடங்கின. மேலும், தவணை தவறியவர்களுக்கு அதிகபட்ச அபராத வட்டி விதிக்கப்படுவதால், யாரும் நிலுவையை செலுத்த முன்வருவதில்லை. இந்தச் சூழலை சமாளிக்கும் வகையில், அபராத வட்டி தள்ளுபடி திட்டத்தை, தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது. இத்திட்டத்தில் பணம் செலுத்தியவர்களில், ஒரு பகுதியினருக்கு பத்திரங்கள் திரும்ப கொடுக்கப்பட்டன. இதன்பின், 2023ல், அபராத வட்டி தள்ளுபடி திட்டத்தில் நிலுவை தொகை செலுத்த, ஆறு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில், 5,000க்கு மேற்பட்டோர், நிலுவை தொகையை செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, கூட்டுறவு வீட்டுவசதி சங்க அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நிலுவையில் உள்ள கடன்களை முடிப்பதற்காக, அபராத வட்டி தள்ளுபடி திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த முடிவு செய்து இருக்கிறோம். இதற்கான வரைவு திட்டம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை வாயிலாக நிதித்துறைக்கு அனுப்பப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதால் ஏற்படும் இழப்புகளுக்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால், ஏற்படும் செலவுகளை, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் இணையமே ஏற்க முன்வந்துள்ளது. இந்த சூழலில், நிதித்துறை ஒப்புதல் கிடைப்பதற்காக, மூன்று மாதங்களாக காத்திருக்கிறோம். இதற்கு ஒப்புதல் அளித்தால், நிலுவையில் உள்ள, 1,200 கோடி ரூபாய் வசூலாக வாய்ப்பு உள்ளது. பணம் கைக்கு வந்தால், நலிவுற்ற நிலையில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், புதிய கடன் கொடுக்கும் நிலைமைக்கு முன்னேறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V GOPALAN
அக் 29, 2024 19:26

லோன் வாங்கியவர்கள் அனைவரும் அவரது உறவினர்கள் தமிழக அரசு பணி அல்லது சட்டசபை உறுப்பினர்களின் உறவினர்களாத்தான் இருப்பார்கள். இவர்களது வாங்கிய வீட்டை ஏலத்தில் வங்கியைப்போல் விற்பனை செய்யாமல் அபராத வட்டியை தள்ளுபடி செய்வது பெரும் குற்றமாகும். வாருங்கள் நீதிமன்றத்துகு செல்வோம்.


புதிய வீடியோ