சென்னை: தீபாவளி கொண்டாட, சொந்த ஊருக்கு மக்கள் செல்லத் துவங்கியதால், சென்னையில் நேற்று பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது.சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,092 பஸ்களுடன், 4,900 சிறப்பு பஸ்கள் என, மூன்று நாட்களுக்கு சேர்த்து, 11,176 பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. அதன்படி, நேற்று முதல் சிறப்பு பஸ்களின் இயக்கம் துவங்கியது.
இதனால், கிளாம்பாக்கம், கோயம்பேடு பஸ் நிலையங்களில் வழக்கத்தை விட பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க, பயணியர் கூட்டம் அலைமோதியது. இன்று 2,125 சிறப்பு பஸ்
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளிக்கு ஏற்கனவே அறிவித்தபடி, சிறப்பு பஸ்கள் இயக்கத்தை துவங்கி உள்ளோம். சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும் 2,092 பஸ்களோடு, 700 சிறப்பு பஸ்களை இயக்க தயாராக இருந்தோம். நேற்று மாலை முதல் பயணியர் கூட்டம் அதிகரித்து வருகிறது. பயணியர் வருகைக்கு ஏற்ப, பஸ்களை கூடுதலாக இயக்க உள்ளோம். இன்று பயணியர் அதிகளவில் செல்வர் என்பதால், வழக்கமாக செல்லும் 2,092 பஸ்களோடு, 2,125 சிறப்பு பஸ்களை இயக்க உள்ளோம். பயணியர் வசதிக்காக ஆங்காங்கே உதவி மையங்களையும் அமைத்துள்ளோம். இதுவரையில் 1.31 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இன்னும் 4.29 லட்சம் இருக்கைகள் காலியாக உள்ளன. மொத்தமுள்ள இருக்கைகளில் இதுவரை 30 சதவீதம் மட்டுமே முன்பதிவு முடிந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.