பெரம்பலுார்:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் வைத்த உண்டியல்களை பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் தாலுகாவுக்குட்பட்ட கொளத்துார் கிராமத்தில், இரு சமூகத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். இதில், ஒரு சமூகத்தினரால் 1970ல், சுந்தரமூர்த்தி அய்யனார் கோவில் கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. கடந்த 2016ல், இக்கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு, கொளத்துார் கிராமத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்கள் நிதி மற்றும் கொடையாளர்கள் நிதி உதவியுடன், 5 கோடி ரூபாயில் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், பொதுமக்கள் சார்பில், இக்கோவிலில் எவர் சில்வரில் இரண்டு உண்டியல்கள் வைக்கப்பட்டன. இது குறித்து, மற்றொரு சமூகத்தினர் அறநிலையத்துறை உதவி இயக்குனருக்கு புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, அறநிலையத்துறை ஆலத்துார் சரக ஆய்வாளர் சுமதி, ஜூலை 23ம் தேதி, கோவிலில் ஆய்வு செய்தார்.அப்போது, கோவிலில் அனுமதியின்றி வைக்கப்பட்ட உண்டியல்களை அகற்ற அறிவுறுத்தினார். உண்டியலை அகற்றாததால், 30ம் தேதி, ஆய்வாளர் சுமதி உண்டியல்களை சீல் வைத்து நடவடிக்கை எடுக்க கோவிலுக்கு சென்றார். அப்போது, கிராமத்தை சேர்ந்த தி.மு.க., பிரமுகரான துணைவேந்தன், அவரது ஆதரவாளர்களான சுபாஷ், சுந்தரேஸ்வரன் உட்பட சிலர், இரண்டு உண்டியல்களையும் பெயர்த்து, டூ வீலரில் வைத்து எடுத்துச் சென்றனர். இது குறித்து, அ றநிலையத்துறை ஆய்வாளர் சுமதி, மருவத்துார் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.