திருப்பரங்குன்றம் மலையில் கிடா வெட்ட அனுமதி மறுப்பு
திருப்பரங்குன்றம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மல்லடிப்பட்டியை சேர்ந்த சையது அபுதாஹிர், 53. குடும்பத்தினருடன் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவில் நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக ஒரு ஆடு, இரண்டு சேவல்களுடன் வந்தார்.மலை அடிவாரத்தில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஆடு, சேவல்களை மலைமேல் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனக் கூறினர். அவர்களுக்கு ஆதரவாக திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மலை படிக்கட்டு முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.போலீஸ் உதவி கமிஷனர்கள் குருசாமி, கணேசன், சீதாராமன், ஆர்.டி.ஓ. கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சு நடத்தினர்.உடன்பாடு ஏற்படாததால், மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆடு, சேவல்கள் கொண்டு வந்தோர் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்து, மதியம் 2:30 மணிக்கு விடுவித்தனர்.