30 நாளுக்குள் என்.ஓ.சி., வழங்காவிட்டால் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி தரலாம்
சென்னை:கட்டுமான திட்டங்களுக்கு ஒற்றை சாளர முறையில், 30 நாட்களுக்குள் என்.ஓ.சி., எனப்படும், தடையின்மை சான்றிதழ் வழங்க வேண்டும். தவறினால், அதை அத்துறையின் ஒப்புதலாக கருதி, கட்டுமான திட்ட அனுமதி வழங்கலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கட்டுமான திட்ட அனுமதி, 'மேனுவல்' முறையில் இருந்தபோது, 22 துறைகளிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும். இதற்கு, விண்ணப்பதாரரே ஒவ்வொரு துறை அலுவலகத்துக்கும் அலையும் நிலை இருந்தது. துறை அதிகாரிகள் இழுத்தடிக்கும் போது, கட்டட அனுமதி தாமதமாகும். இது, கட்டுமான துறை மட்டுமல்லாது, வீடு வாங்குவோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், அனைத்து வகை கட்டுமான திட்ட அனுமதி பணிகளும், ஒற்றை சாளர முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் வரும் விண்ணப்பங்களை, பிற துறை அதிகாரிகள், 'ஆன்லைன்' வழியாக சரிபார்த்து, தடையின்மை சான்றிதழ் வழங்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டது. தற்போது, 19 துறைகளிடம் தடையின்மை சான்றிதழ் பெற்றால் போதும். அதிலும், தற்போதைய நிலவரப்படி, 11 துறைகள் ஆன்லைன் முறைக்குள் இணைக்கப்பட்டு விட்டன.இதனால், மாவட்ட கலெக்டர், புவியியல் மற்றும் சுரங்க துறை, தீயணைப்பு துறை, நீர்வளத்துறை, வனத்துறை, சென்னை மெட்ரோ ரயில், மாநில நெடுஞ்சாலை துறை, சிறுதொழில் வளர்ச்சி கழகம், வீட்டுவசதி வாரியம், ஓ.என்.ஜி.சி., மற்றும் வேளாண்மை துறை ஆகியவை, ஆன்லைன் முறைக்கு வந்துள்ளன.இதில், நெடுஞ்சாலை துறை, 15 நாட்களிலும், பிற துறைகள், 30 நாட்களிலும் தடையின்மை சான்றிதழை ஆன்லைன் முறையில் வழங்க வேண்டும். உரிய காரணங்கள் தெரிவிக்காமல் ஒப்புதலும் அளிக்காமல் இருந்தால், அதை அத்துறையின் ஒப்புதலாக கருதி, சம்பந்தப்பட்ட விண்ணப்பத்துக்கு கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்படும். இதற்கான அரசாணையை, வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.'கோரிக்கை நிறைவேறியது'இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' தேசிய துணை தலைவர் எஸ்.ஸ்ரீதரன் கூறியதாவது:கட்டுமான திட்ட அனுமதி தொடர்பான நடைமுறைகளில், தடையின்மை சான்று பெறுவதில் பல்வேறு பிரச்னைகள் இருந்தன. அனைத்து ஆவணங்கள், விபரங்கள் சரியாக இருந்தாலும், தடையின்மை சான்று தாமதத்தால் கட்டுமான திட்ட அனுமதியே தாமதமாகும் சூழல் உருவானது.குறிப்பிட்ட கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறைகள் தவறும்பட்சத்தில் அதை ஒப்புதலாக கருதி, திட்ட அனுமதி வழங்க வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தோம். தமிழக அரசின் தற்போதைய உத்தரவால், எங்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.