50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள்; தனியார் ஏன்... ரூ.100 கோடியை தமிழக அரசு செலவிடாதா?
சென்னை:சிறுநீரக செயலிழப்புக்குள்ளான நோயாளிகளின் உயிரை காக்க, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் வரை, 'ஹீமோ டயாலிசிஸ்' என்ற ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை மேற்கொள்ள, சிறுநீரக மருத்துவ டாக்டர்கள், ரத்தநாள மருத்துவ நிபுணர்கள், இதய மருத்துவ நிபுணர்கள் போன்றவர்களின் ஆலோசனையும் கண்காணிப்பும் அவசியம். ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை டெக்னீசியன்களும் அவசியம்.தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஓரிரு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேநேரம், கிராமப்புற மக்கள் எளிதில் அணுக முடியாத சூழலில் இருப்பதால், அருகாமை தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை உள்ளது.எனவே, கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில், மேம்படுத்தப்பட்ட 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனியார் பங்களிப்புடன், டயாலிசிஸ் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, தனியார் பங்களிப்புடன் 50 டயாலிசிஸ் சிகிச்சை மையம் அமைப்பதற்கு அனுமதி அளித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் வாயிலாக, டயாலிசிஸ் சிகிச்சை மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரூ.100 கோடி செலவிட முடியாதா?
தமிழகத்தில், 139 அரசு மருத்துவமனைகளில், 1,287 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக, தினமும் 9,180 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், டயாலிசிஸ் சிகிச்சை மையம் துவங்கப்பட்டால், பயனடைவோர் எண்ணிக்கை மேலும் அதிரிக்கும். எனவே, இத்திட்டம் வரவேற்கக்கூடிய ஒன்று.அதேநேரம், 50 டயாலிசிஸ் மையத்திற்கு, தனியார் பங்களிப்பை அரசு நாடுகிறது. ஒரு மையம் அமைக்க, குறைந்தது 2 கோடி ரூபாய் வரை செலவாகலாம். அதன்படி, 100 கோடி ரூபாய் வரை செலவிட வேண்டியிருக்கும். இந்நிதியை செலவிட, அரசு தயராக இல்லையா என்ற கேள்வி எழுகிறது.தனியார் பங்களிப்பில் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளதால், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்களிடம் உதவிகேட்டு, மாவட்ட சுகாதார அதிகாரிகள் நடையாய் நடந்து வருகின்றனர்.மகளிருக்கு பஸ் கட்டணம் இலவசம், பெண்களுக்கான மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட பல்வேறு இலவசங்களை அரசு அளித்து வருகிறது. அந்நிதியை பயனுள்ள வகையில், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த செலவிடலாம்.