தமிழக சுற்றுலா திட்டங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசிடம் மனு
சென்னை:'தமிழகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி உதவி செய்ய வேண்டும்' என, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ெஷகாவத்திடம், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று டில்லியில் கோரிக்கை மனு அளித்தார்.மனுவில் அவர் கூறியிருப்பதாவது: மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு, 30 கோடி; நீலகிரி மாவட்டம் இயற்கை சுற்றுலா தலம் பைக்காராவில், சுற்றுலா பயணியருக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு, 28 கோடி; மாமல்லபுரத்தில் பாரம்பரிய நந்தவனம் அமைக்க, 99 கோடி; ஊட்டி மற்றும் தேவாலாவில் பூந்தோட்டம் அமைக்க 72 கோடி; ராமேஸ்வரத்தை முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்த, 99 கோடி ரூபாய் வழங்க வேண்டும். 'பிரசாத்' திட்டத்தின் கீழ், தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள எட்டு நவக்கிரக கோவில்களில், சுற்றுலா பயணியருக்கான வசதிகளை மேம்படுத்த, 44.95 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.சுற்றுலா மேம்பாட்டிற்காக, மராட்டியர்கள், நாயக்கர்கள் மற்றும் பாளையக்காரர்கள் எழுப்பிய கட்டடங்களை பாதுகாக்க மற்றும் புனரமைக்க, 3,000 கோடி ரூபாய்; சுற்றுலா துறை வளர்ச்சியை மேம்படுத்த, 1,200 கோடி ரூபாயை, 16வது நிதிக்குழு வாயிலாக வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. சந்திப்பின் போது, தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா, தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் உடனிருந்தனர்.