பறவை மோதி ஓட்டை விழுந்த விமானம் கொழும்பில் இருந்து சென்னைக்கு இயக்கம்
சென்னை:இலங்கை தலைநகர் கொழும்பில் தரையிறங்கிய, 'ஏர் இந்தியா' விமானம் மீது பறவை மோதியது தெரிந்தும், அதே விமானத்தை மீண்டும் சென்னைக்கு இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் சர்வதேச விமானங்கள், சமீப நாட்களாக இயந்திர கோளாறு போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. 275 பேர் கடந்த ஜூன் 12ம் தேதி, குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து பிரிட்டனின் லண்டனுக்கு, 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து வெடித்து சிதறியது. இதில், 275 பேர் உயிரிழந்தனர். இயந்திர கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம் போன்ற பதைபதைக்கும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், சென்னை யில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு, ஏர் இந்தியா பயணியர் விமானம் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு புறப்பட்டது; 164 பேர் இருந்தனர். விமானம் அதிகாலை 1:55 மணிக்கு கொழும்பில் தரையிறங்கியது. பயணியரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். பொதுவாக விமானம் தரையிறங்கியதும், பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை பரிசோதனை செய்து சரி பார்ப்பர். அப்போது, இந்த விமானத்தின் இன்ஜின் பகுதியில், பறவை மோதி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொழும்பில் தரையிறங்கியபோது தான் பறவை மோதியது தெரியவந்தது. இதுபோன்ற நேரங்களில், பொறியாளர்கள் குழு, விமானத்தை மீண்டும் இயக்க அறிவுறுத்தாது; ஆனால், இதே விமானம் நேற்று அதிகாலை, 3:20 மணிக்கு, 147 பேருடன் மீண்டும் சென்னை புறப்பட்டு, காலை 4:35 மணிக்கு தரையிறங்கியது. சென்னையில் உள்ள, ஏர் இந்தியா பொறியாளர்கள் குழு மற்றும் விமான நிலைய ஆணைய பராமரிப்பு பொறியாளர்கள் குழுவினர், மீண்டும் விமானத்தை முழுதும் பரிசோதித்தனர். அதில், விமானத்தின் முன்பகுதியில், 'இன்ஜின் பிளேட்' பகுதி உடைந்து, அதிக சேதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அந்த விமானம் பழுது பார்க்கும் பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. விமானத்தின் முன் பகுதி சேதமடைந்தது தெரிந்திருந்தும், பயணியரின் உயிரை பணயம் வைத்து விமானம் இயக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்த உள்ளது. சந்தேகம் இதுகுறித்து, 'ஏர் இந்தியா' வெளியிட்டுள்ள விளக்கம்: கடந்த 7ம் தேதியன்று, சென்னை - கொழும்பு சென்ற, ஏ.ஐ., 273 விமானத்தில் பறவை மோதி இருக்கலாம் என சந்தேகித்தனர். கொழும்பில் நடந்த ஆய்வில், எந்த சேதமும் காணப்படவில்லை. சென்னை வந்த பின், இன்ஜின் பிளேட்டில் சேதம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.