மாநில புறவழிச்சாலையில் சுங்க கட்டணம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு
திண்டிவனம்:''மாநில புறவழிச்சாலையை தனியார் சுங்க கட்டணத்திற்கு விடக்கூடாது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் அவர் அளித்த பேட்டி: சென்னை, திருமங்கலம், அண்ணாநகர் பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் நடந்து கொண்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசு, தமிழக மீனவர்களை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே தீர்வு. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைபோல், தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையும், சுங்கவரி கட்டணத்தை வசூல் செய்யப்போவதாக தகவல் வருகிறது. முதற்கட்டமாக வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சுங்கவரி கட்டணத்தை வசூலிப்பதற்கு, தனியாரிடம் விட முடிவு செய்து உள்ளது. இதேபோல் பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமை தனியாரிடம் கொடுப்பதற்காக தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது சரியான அணுகுமுறை அல்ல. மாநில புறவழிச்சாலையை, தனியார் சுங்க கட்டணத்திற்கு விடக்கூடாது. ஏற்கனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்க வரி கட்டணம் வசூலிக்கும் போக்கால், மக்களுக்கு அதிக பாதிப்பு இருக்கிறது என்று சொல்லி, அதை எதிர்த்து வரும் நிலையில், அதே அணுகுமுறையை தமிழக அரசும் மேற்கொள்வது சரியல்ல. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கம் வசூலிக்கும் டோல் பிளாசாக்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசு, புதிதாக தங்கள் சாலைகளுக்கும் சுங்கம் வசூலிக்க முற்படக்கூடாது. அகழாய்வில் தமிழகம் எப்போதுமே முன்மாதிரி மாநிலமாகத்தான் உள்ளது. கீழடி, கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லுார், கங்கை கொண்ட சோழபுரம் வரிசையில் புதுக்கோட்டை மாவட்டமும் இணைந்துள்ளது. இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் நல்ல அரசு அமையனும், போதை வஸ்துகள் ஒழியணும், கஞ்சா இல்லாத தமிழகம் இருக்கணும் என்பது தான் எனது விருப்பம். அதுவே என்னுடைய சுதந்திர தின வாழ்த்தும் கூட. இவ்வாறு அவர் கூறினார்.