உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிரீமிலேயர் முறையை அகற்ற சட்டத்திருத்தம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

கிரீமிலேயர் முறையை அகற்ற சட்டத்திருத்தம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: 'அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்து, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில், கிரீமிலேயர் முறையை உடனே அகற்ற வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில், 'கிரீமிலேயர்' முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், அதை செயல்படுத்துவது மத்திய அரசின் விருப்பம் என்றும், அதில் தலையிட விரும்பவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு சமூக நீதி வரலாற்றில் முக்கிய மைல்கல். பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பல வழக்குகளில், கடந்த ஆண்டு ஆக., 1ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 'பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீட்டை வழங்க, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு' என்று அறிவித்தது.

கருத்து

அது மட்டுமின்றி, 'பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். கிரீமிலேயர்களை அடையாளம் காண்பதற்கான கொள்கையை அரசு வகுக்க வேண்டும்' என்றும், நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். அந்தத் தீர்ப்பு இன்று வரை செயல்படுத்தப்படாத நிலையில், பட்டியலின மக்களில், கிரீமிலேயர் பிரிவினருக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டை உடனே ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, ம.பி.,யை சேர்ந்த சந்தோஷ் மாளவியா தொடர்ந்த வழக்கின் விசாரணையின் போது தான் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.எந்த ஒரு வகுப்பிலும், கிரீமிலேயர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது என்பது, தங்களின் எண்ணம் என்றாலும், அது குறித்து கொள்கை முடிவு எடுப்பது, அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது தான் என்பது தான், நீதிபதிகள் தெளிவாக தெரிவித்திருக்கும் செய்தி.

நடவடிக்கை

உச்ச நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. அரசியலமைப்பு சட்டத்தில், உரிய திருத்தங்களை செய்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை உடனே அகற்ற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

naranam
ஜன 13, 2025 05:17

எல்லாத்தையும் இவனுகளுக்கே கொடுக்க வேண்டுமா?


T Jayakumar
ஜன 13, 2025 04:56

அனைத்து இடங்களிலும் ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்.


Laddoo
ஜன 13, 2025 04:12

திருந்த மாட்டீரா, திருந்தவே மாட்டீரா? இப்படியே போனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான். சமூக நீதியை மொதல்ல ஒங்க கட்சிக்குள்ள செயல் படுத்த பாருங்க. பாமக இன்னொரு குடும்ப வாரிசு அரசியல் கட்சியாகி விட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை