உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜினாமா முடிவில் பா.ம.க., எம்.எல்.ஏ.,; தந்தை - மகன் மோதலில் அடுத்த திருப்பம்

ராஜினாமா முடிவில் பா.ம.க., எம்.எல்.ஏ.,; தந்தை - மகன் மோதலில் அடுத்த திருப்பம்

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமையில், இன்று சேலம், தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ள நிலையில், அந்த மாவட்டங்களைச் சேர்ந்த ராமதாஸ் ஆதரவு பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்களான ஜி.கே.மணி, அருள் ஆகியோர், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.பா.ம.க.,வில் அப்பா ராமதாஸ் -- மகன் அன்புமணி இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. கட்சி நிறுவனரான ராமதாஸ், கட்சித் தலைவர் அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கி விட்டு, தனது ஆதரவாளர்களை புதிய நிர்வாகிகளாக நியமித்து வருகிறார். இருவரையும் சமாதானப்படுத்த பலரும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.

திட்டவட்டம்

'என் மூச்சிருக்கும் வரை பா.ம.க., தலைவராக இருப்பேன்' என, ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும், பொதுக்குழுவை கூட்டவும் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 15ம் தேதியில் இருந்து, மாவட்ட வாரியாக பா.ம.க., பொதுக்குழு கூட்டங்களை, அன்புமணி நடத்தி வருகிறார். இதுவரை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 10:00 மணிக்கு சேலம் மாவட்ட பொதுக்குழுவும், மாலை 3:00 மணிக்கு தர்மபுரி மாவட்ட பொதுக்குழுவும் நடக்கவுள்ளது. இந்த நிலையில், சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள், நேற்று சென்னையில் சபாநாயகர் அப்பாவுவை சந்திக்க, தலைமைச் செயலகம் சென்றபோது, திடீர் நெஞ்சுவலியால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இரு அணிகள்

சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துமனையில், இ.சி.ஜி., எக்கோ ஆகிய பரிசோதனைகளுக்கு பின், தீவிர சிகிச்சைப் பிரிவில், அவர் அனுமதிக்கப்பட்டார். இதேபோல, பா.ம.க., கவுரவத் தலைவரும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜி.கே.மணியும் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு, உடல்நலக் குறைவால், சென்னை அப்போலோ மருத்துவமனையில், நேற்று அனுமதிக்கப்பட்டார்.சேலம் மாநகர் மாவட்ட செயலராக எம்.எல்.ஏ.,வான அருள்; சேலம் மேற்கு மா.செ.,வாக மேட்டூர் எம்.எல்.ஏ.,வான சதாசிவம்; கிழக்கு நடராஜன்; தெற்கு பச்சமுத்து; வடக்கு செல்வம் ஆகியோரை, ராமதாஸ் புதிய மாவட்ட செயலர்களாக அறிவித்துள்ளார். தெற்கு, வடக்கு, கிழக்கு மாவட்டச்செயலர்களாக இருந்த செல்வகுமார், நாராயணன், ஜெயபிரகாஷ் ஆகியோரை, ராமதாஸ் நீக்கியுள்ளார். தற்போது புதிய, பழைய மாவட்ட செயலர்கள் இரு அணிகளிலும் உள்ளனர்.

குழப்பம்

இதற்கிடையில், அன்புமணியின் இன்றைய மாவட்ட பொதுக்குழுவை தவிர்ப்பதற்காக, கோவில் விழா, உறவினர் வீட்டு நிகழ்ச்சி என, முன் கூட்டியே பா.ம.க., நிர்வாகிகள் சிலர் வெளியூர் சென்றுவிட்டனர். இந்நிலையில், ராமதாஸ் ஆதரவாளர்களான ஜி.கே.மணி, அருள் ஆகிய இருவரும், அன்புமணி கூட்டம் நடைபெறும் நிலையில், ஒரே நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பா.ம.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ராமதாஸ் - அன்புமணி பிரச்னையில், யார் சொல்வதை கேட்பது என்ற குழப்பம், கட்சி நிர்வாகிகள் அனைவரிடமும் உள்ளது. அந்த வகையில், ஜி.கே.மணி மற்றும் அருள் ஆகிய இரு எம்.எல்.ஏ.,க்களும் ராமதாஸ் பக்கம் இருந்தாலும், அன்புமணியையும் அனுசரித்து செல்லவே விரும்புகின்றனர். அதனால், அவர் வருகையின் போது, சேலம், தருமபுரி கூட்டங்களில் தவிர்க்கவே, சென்னைக்கு கிளம்பி வந்தனர். அப்போது, இருவருடைய உடல் நிலையும் பாதிக்கப்பட்டு விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

எம்.எல்.ஏ., பதவி ராஜினாமா?

பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் 5 பேரில், ஜி.கே.மணி, அருள் ஆகியோர், ராமதாஸ் பக்கம் உள்ளனர். மயிலம் சிவகுமார், தர்மபுரி வெங்கடேசன், மேட்டூர் சதாசிவம் ஆகிய மூவரும் அன்புமணி பக்கம் உள்ளனர். ராமதாசை ஆதரிக்கும் அருள், தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காகவே சபாநாயகர் அப்பாவுவை சந்திப்பதற்காக, நேற்று தலைமைச் செயலகம் வந்ததாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பாரத புதல்வன்
ஜூன் 19, 2025 11:36

கட்சியே கவலைக்கிடமாக உள்ளது.


R Dhasarathan
ஜூன் 19, 2025 08:50

ஒரு சீட்டு கூட கிடைக்காத நிலைக்கு கட்சியை தள்ளுகிறார்கள். வீடு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்... எப்போதும் இவர்கள் ஒற்றுமையாக இருந்தது கிடையாது வீட்டில் அண்ணன் தம்பிகளுடன் கூட..


suresh guptha
ஜூன் 19, 2025 12:56

MONEY


சமீபத்திய செய்தி