உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியலால் வந்த அலட்சியம்; ஆசிரியர்கள் 32,500 பேர் தவிப்பு; அரசுக்கு ராமதாஸ் குட்டு

அரசியலால் வந்த அலட்சியம்; ஆசிரியர்கள் 32,500 பேர் தவிப்பு; அரசுக்கு ராமதாஸ் குட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கல்வித்திட்ட பணியாளர்களுக்கு ஊதிய விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்வதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். மத்திய அரசிடம் இருந்து உரிய நிதி வந்து சேராததால் தமிழக கல்வித்துறையில் உள்ள 32,500 பேருக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு உரிய ஊதியம் அளிக்க தமிழக அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையின் விவரம் வருமாறு;

ஊதியம்

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் ஓர் அங்கமாக திகழும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 15,000 பேர், ஒப்பந்த ஊழியர்கள் 17,500 பேர் என மொத்தம் 32,500 பேருக்கு செப்டம்பர் மாத ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. திட்டத்தின் இயக்குனராக பணியாற்றும் அதிகாரி ஆர்த்திக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. கல்வித்துறை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் செய்யப்படும் தாமதமும், காட்டப்படும் அலட்சியமும் கண்டிக்கத்தக்கவை.

காரணம்

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2024-25ம் கல்வி ஆண்டுக்கான முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு இன்று வரை வழங்காதது தான் ஊதியம் வழங்காததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கான நிதியை வழங்க மத்திய அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. கல்வித்துறைக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு காட்டும் பிடிவாதம் நியாயமானதல்ல.

மனிதநேயம் இல்லை

அதே நேரத்தில் மத்திய அரசின் நிதி வரவில்லை என்பதையே காரணமாக காட்டி, ஒருங்கிணைந்த கல்வித்திட்ட ஆசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்குவதை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது மனிதநேயமற்ற செயலாகும். மத்திய அரசிடமிருந்து நிதி வராவிட்டாலும் கூட, தமிழக அரசு நினைத்திருந்தால் தன்னிடம் உள்ள பிற துறைகளுக்கான நிதியை விதிகளுக்கு உட்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்கியிருக்க முடியும். ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழக அரசுக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்டப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.25 கோடியை ஏற்பாடு செய்வது இயலாத ஒன்றல்ல.

இறுதி நாட்கள்

ஆனாலும், ஒருங்கிணைந்த கல்வித்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் அவர்களை தவிக்க விட்டிருப்பதை வைத்துப் பார்க்கும் போது, இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு பதிலாக, பெரிதுபடுத்தி அரசியல் லாபம் தேடவே தமிழக அரசு முயல்கிறது என்பது உறுதியாகிறது. இந்தத் திட்டத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வரும் பலர் மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்கள். மாதத்தின் இறுதி நாட்களையே கடன் வாங்கிக் கழிக்கும் அவர்களால் மாதத்தின் முதல் நாளில் ஊதியம் வராமல் வாழவே முடியாது. அவர்களின் துயரத்தை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆபத்து

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி வராததால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக, தமிழ்நாட்டில் 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. இப்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படாததன் மூலம் பள்ளிக்கல்வித் திட்டத்தின் செயல்பாடுகளே முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பணம் இல்லை என்று பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்கினால் கல்வித்துறையில் அதை விட பேரவலம் இருக்க முடியாது.

ஏற்பாடு

நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டும் முடிவடைந்துவிட்ட நிலையில், மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தமிழக அரசும் அந்த நிதிக்காக காத்திருக்காமல் சொந்த நிதியில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajkamal
அக் 02, 2024 21:19

இது உண்மையான தகவல் இந்த ஆட்சியில் ஆசிரியர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது மாணவர்கள் கல்வித்திறன் பாதிக்கப்பட்டு போதை பழக்கத்திற்கு அடிமையாகும் நிலைமை உருவாகியுள்ளது


ems
அக் 02, 2024 15:33

தங்களது பதிவு முற்றிலும் உண்மை...


Suppan
அக் 02, 2024 13:34

பி எம் ஸ்ரீ திட்டத்தில் சேர்கிறோம் என்று கையெழுத்திட்டுவிட்டு பின்வாங்குவதற்குப் பெயர் என்ன? துரோகம். அந்தத்திட்டத்தில் சேர்ந்ததால்தானே மத்திய ஒன்றிய அரசு நிதி உதவி செய்ய ஆரம்பித்தது ? பின்வாங்கியபின் நிதி உதவி எப்படி கிடைக்கும்? . துரோகம் எய்துவிட்டு "ஆஹா ஒன்றியம் எங்களைக் கைவிட்டுவிட்டது என்று கூவிப் பயனென்ன? கடைந்தெடுத்த கேவலமான அரசியல். அப்போஸ்தலன் சார் ஜி எஸ் டி யை எப்படி நிறுத்த முடியும் என்று சொல்லித்தருவீர்களா ?


Priyan
அக் 02, 2024 17:58

பி எம் ஸ்ரீ திட்டத்தை நாங்கள் சில விதி மாற்றங்களோடு ஒத்து கொள்கிறோம் என்று தான் தமிழக அரசு சொல்லி இருக்கிறது. விதி மாற்றங்களை பரிந்துரைக்க ஒரு குழுவையும் அமைப்போம் என்று தான் தமிழக முதன்மை செயலாளர் ஒன்றிய அரசுக்கு கடிதமும் அனுப்பி உள்ளார். மேலும் திட்டத்தை ஏற்று கொண்டால் தான் என ஒன்றிய அரசு சொல்வது அக்கிரமத்தின் உச்சம்.


Palanisamy Sekar
அக் 02, 2024 13:12

வெறும் இருபத்தைந்து கோடி என்பது சாதாரண மந்திரியிடம் உள்ள பாக்கெட் மணிக்கு சமம். ஏன் செப்டம்பரில் சம்பளம் போட பணமிருக்காது என்று தெரிந்தும் எதற்க்காக நாற்பத்திரண்டு கோடி செலவு செய்து கார் ரேஸ் நடத்தினீர்கள். அதற்கெல்லாம் பணம் எங்கிருந்து கொட்டுகின்றது? ஆசிரியர்களுக்கு சம்பளம் போடபணமில்லை.. போக்குவரத்து ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும்போது கொடுக்க பணமில்லை என்கிற தமிழக அரசு எதற்க்காக தெண்டமாக முப்பெரும் விழா என்று அரசு சார்பில் அவ்வளவு செலவு செய்கின்றீர்கள்? அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு உல்லாச பயணம் செல்ல எப்படி பணம் தாராளமாக வந்து குவிகின்றது? தீண்ட செலவுக்கு போட்டோ எடுக்கவும் விளம்பரம் செய்யவும் பணத்துக்கு பஞ்சமே இல்லை. மாதந்தோறும் வீணாக யார் யாருக்கோ என்று கட்சியினருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க எப்படி பணம் சேருகின்றது? மணல் விற்பனை செய்வோர் பல்லாயிரம் கோடி பணம் வைத்திருக்கினார்கள். மந்திரியிடம் இல்லாத பணமா? ஏன் முப்பதாயிரம் கோடி பணம் சேர்த்துவிட்டார் என்று தமிழக மந்திரி பி டி ஆர் சொன்னாரே அந்த பணத்தை எடுத்து கொடுப்பது? மனசு வாராதோ? ஆசிரியர்கள் வயிற்றில் அடிப்பதில் அவ்வளவு குஷி.. ஏன்னா அவர்கள்தான் இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு எல்லா தகிடுதிடத்தோம் வேலையெல்லாம் செய்தார்கள் அல்லவா? அதற்கு நன்றிக்கடனா என்னமோ தெரியல.. இது வீணாப்போன ஆட்சி..


Barakat Ali
அக் 02, 2024 13:03

அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் விட்டால் அல்லது தாமதப்படுத்தினால், அதனால் அவர்களுக்கு ஏற்படும் கோபத்தை ஒன்றியத்தின் மீது திருப்பலாம் என்று மன்னர் துக்ளக்கார் நினைக்கிறார் .....


Apposthalan samlin
அக் 02, 2024 12:20

திமுக 32500 பெரும் ரோட்டுக்கு வந்து போராடும் என்று நினைக்கிறது மயிலை மயிலே இரகு போடு என்றால் போடாது பிடுங்க வேண்டும் .அதே மாதிரி தான் இதுவும் gst கொடுப்பதை நிறுத்தினாலும் வழிக்கு வருவர்


முக்கிய வீடியோ