தி.மு.க., முன்னாள் எம்.பி., மீதான வழக்கு பாளை இன்ஸ்பெக்டர்கள் ஆஜராக உத்தரவு
சென்னை: தி.மு.க., முன்னாள் எம்.பி., ஞானதிரவியம் மீதான வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை, குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வழங்காத, பாளையங்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், நாளை நேரில் ஆஜராகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க., முன்னாள் எம்.பி., ஞானதிரவியம். இவரது ஆதரவாளர்கள், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சி.எஸ்.ஐ., திருமண்டல அலுவலகம் அருகே, மதபோதகர் காட்ப்ரே வாஷிங்டன் நோபல் என்பவரை, 2023 ஜூன், 26ம் தேதி தாக்கியதாக கூறப்படுகிறது. மதபோதகர் அளித்த புகாரில், ஞானதிரவியம் உட்பட, 33 பேர் மீது, பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க, திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மதபோதகர் காட்ப்ரே வாஷிங்டன் நோபல் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கில், நீதிமன்றம் அனுப்பிய சம்மன் வழங்காதது குறித்து கேள்வி எழுப்பி, அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை ஆய்வு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட பின் தான், 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், சம்மன் அனுப்பவும், வழக்கை முடிக்கவும் கோ ரி, நீதிமன்றத்தை மக்கள் நாட வேண்டியுள்ளது. நீதிமன்ற உத்தரவு பெற்று தான் வழக்கை முடிக்க வேண்டுமானால், காவல் துறை எதற்கு? கடந்தாண்டு நவம்பர் முதல், இம்மாதம் 21ம் தேதி வரை, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள், நாளை நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
'எனக்கு ஏதாவது நேர்ந்தால் எம்.பி., தான் காரணம்'
மதபோதகர் காட்ப்ரே வாஷிங்டன் நோபல் அளித்த பேட்டி: தி.மு.க., முன்னாள் எம்.பி., ஞானதிரவியம், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் குவாரிகள் நடத்தி வருகிறார். தனக்கு உதவியாக ரவுடிகள் பலரை வைத்துள்ளார். அவருக்கு எதிராக, நான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என, ஞானதிரவியம் தரப்பிடம் இருந்து, எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. என் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஞானதிரவியமும், அவருக்கு ஆதரவாக செயல்படும் காவல் துறையும் தான் காரணம். எனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, தனியாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.