உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீப திருவிழாவில் போலீஸ் கெடுபிடியால் பக்தர்கள் அவதி

தீப திருவிழாவில் போலீஸ் கெடுபிடியால் பக்தர்கள் அவதி

திருவண்ணாமலை: திருவண்ணாமை தீப திருவிழாவில், போலீஸ் கெடுபிடியால் பக்தர்கள் அவதி அடைந்த நிலையில், ‘ஆன்லைன் பாஸ்’ குளறுபடியால் பக்தர்கள் சிரமமடைந்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் முக்கிய விழாவான மஹா தீப திருவிழா இன்று (நவ.,24) மாலை நடந்தது. இதை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். அவ்வாறு வருகை தந்த பக்தர்கள், போலீஸ் கெடுபிடியால் சிக்கி தவித்தனர். மாட வீதி வழியாக பக்தர்கள் செல்லும்போது, பூத நாராயணன் கோவில் சந்திப்பில் இரும்பு தடுப்பு வேலி அமைத்து தடுக்கப்பட்டதால், பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். கோவிலினுள் கொடி மரம் அருகில் பஞ்ச மூர்த்திகள் ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இதை காண, கோவில் வளாகத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்து கோவிலிற்குள் சென்று காத்திருந்த நிலையில், சம்பந்த விநாயகர் எதிர்புறம் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் போலீசார் இரும்பு தடுப்பு வேலி அமைத்து அவர்கள் நீண்ட வரிசையாக நின்றதால், போலீசாரின் முதுகை பக்தர்கள் பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பக்தர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்ய முயன்றும், பக்தர்களை சமாதானம் செய்ய முடியாமல் திகைத்தனர். இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது. கோவிலினுள், 1,500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், பாஸ் வைத்திருந்தும் பக்தர்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். போலீசாரின் குடும்பத்தினர் எவ்வித பாஸ் இன்றி அனுமதிக்கப்பட்டனர். முக்கிய வி.ஐ.பி.,க்கள் செல்லும்போது அவர்களை பின்தொடர்ந்து, 10க்கும் மேற்பட்டோர் சென்ற நிலையில் அவர்கள் எவ்வித பாஸ் இல்லாமல் சென்றனர். ‘சர்வர்’ கோளாறால் ஆன்லைன் பாஸ் பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர்கள், சர்வர் கோளாறால் பிரின்ட் எடுக்க முடியாமல் தவித்தனர். இதுபோன்ற பல்வேறு குளறுபடியால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். திருவண்ணாமலை கோவிலை சுற்றி, 2 கி.மீ., சுற்றளவிற்கு உள்ள வீதி சந்திப்புகளில் இரும்பு தடுப்பு வேலி வைத்து அடைக்கப்பட்டதால், உள்ளூர் குடியிருப்பு வாசிகள், வீட்டிலிருந்து வாகனங்களை வெளியே எடுத்து செல்ல முடியாமல் தவித்தனர். இதனால், உள்ளூர் குடியிருப்புவாசிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !