உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி பா.ஜ., நிர்வாகி மற்றும் மனைவிக்கு போலீஸ் வலை

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி பா.ஜ., நிர்வாகி மற்றும் மனைவிக்கு போலீஸ் வலை

சென்னை:வருமான வரித்துறை, என்.ஐ.ஏ., மற்றும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவில், வேலை வாங்கி தருவதாக, விளையாட்டு வீரர்களை குறி வைத்து, 49.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை, போலீசார் தேடி வருகின்றனர்.வேலுார் மாவட்டம் காட்பாடி அருகே, கிளித்தான் பட்டரை பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்குமார், 32. சென்னை அண்ணா பல்கலையில், முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.சிலம்பம் கற்று, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில், மத்திய, மாநில அரசு பணிகளில் சேர முயற்சித்து வந்தார். அதற்காக, 2022ல், சமூக வலைதளம் வாயிலாக, சென்னை பொழிச்சலுாரில் செயல்பட்ட, 'யங் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா' நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.இந்நிறுவனம் சார்பில் அவருக்கு சிலம்பம் கற்று தரப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயராம், 'நான் தமிழக பா.ஜ.,வில், செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு பிரிவு துணைத் தலைவராக உள்ளேன்.என் மனைவி அஸ்வினி, அலுவலக ஊழியர் பிரியா ஆகியோர், பா.ஜ.,வில் பொறுப்பில் உள்ளனர். எங்களுக்கு மத்திய அமைச்சர்களுடன் தொடர்பு உள்ளது. அவர்களின் சிபாரிசை பெற்று, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில், மத்திய அரசு பணி வாங்கி தருகிறோம்' என்று கூறியுள்ளார்.அதை நம்பிய லோகேஷ்குமாருக்கு, என்.ஐ.ஏ.,வில், இன்ஸ்பெக்டர் பணி வாங்கி தருவதாகக் கூறி, 31.25 லட்சம் ரூபாய் வாங்கி, அவருக்கு போலி பணி நியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்துள்ளார். பணத்தை மனைவி, மாமியார் வங்கி கணக்கு வாயிலாக பெற்றுள்ளார். இது தவிர, விளையாட்டு வீரர்களான, குடியாத்தம் டிசில்வா, திருத்தணி தணிகாசலம், காஞ்சிபுரம் திருப்பாவை ஆகியோரிடமும், 18.25 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார். இதற்கு, ஜெயராம் மனைவி, மாமியார், அலுவலக ஊழியர் ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர்.ஜெயராம் வழங்கிய, சிலம்பம் விளையாட்டுக்கான சான்றிதழ் மற்றும் என்.ஐ.ஏ., இன்ஸ்பெக்டர் பணி நியமன ஆணை போலி என, தெரிய வந்ததால், லோகேஷ்குமார், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜெயராம் உள்ளிட்ட நான்கு பேர் மீது, சங்கர் நகர் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள, ஜெயராம் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி